வியாழன், 19 ஆகஸ்ட், 2010

காதல் பூக்கும் மாதம் - 60

6. அலர் அறிவுறுத்தல்

காதல்
புரியவில்லையென்று போகத்துடித்தாலும்,
உனக்கும் எனக்கும்
‘ஏதோ’ இருக்கிறது என்று ஊர் பேசுகிறதே…
அந்த சுகத்துக்காகதான் போகாமல்
ஏதோ இருக்கிறது… என் உயிரும்!


அலரெழ வாருயிர் நிற்கு மதனைப்
பலரறியார் பாக்கியத் தால்.

எம் காதலைப் பற்றி அலர் எழுவதால் அரிய உயிர் போகாமல் நிற்கின்றது; எம் நல்வினைப் பயனால் அதைப் பலரும் அறியாமலிருக்கின்றனர்.


நம்மிருவரையும் தொடர்புபடுத்தி
கேலி பேசும் நண்பர்க்கெல்லாம் தெரியுமா?
அதுதான் நம் காதல் வளர உதவுகிறதென!




மலரன்ன கண்ணா ளருமை யறியா
தலரெமக் கீந்ததிவ் வூர்.

மலர்போன்ற கண்ண உடைய இவளுடைய அருமை அறியாமல், இந்த ஊரார் எளியவளாகக் கருதி அலர் கூறி எமக்கு உதவி செய்தனர்.

நீயெனக்குக் கிடைத்தது
வதந்தியாகப் பரவுகிறதென வருந்துகிறாய்.
பின்னே, வரம் கிடைத்தால் வதந்தி பரவாதா?


உறாஅதோ வூரறிந்த கௌவை யதனைப்
பெறாஅது பெற்றன்ன நீர்த்து.

ஊரார் எல்லாரும் அறிந்துள்ள அலர் நமக்குப் பொருந்தாதோ? (பொருந்தும்). அந்த அலர் பெறமுடியாமலிருந்த பெற்றாற்போன்ற நன்மை உடையதாக இருக்கின்றது

நம் காதல் எல்லோருக்கும் தெரிந்து விட்டதே என வாடுகிறாய்.
இனிக் கவலையில்லையென
குதிக்கிறது காதல்.


கவ்வயாற் கவ்விது காம மதுவின்றேல்
தவ்வென்னுந் தன்மை யிழந்து.

எம் காமம் ஊரார் சொல்லுகின்ற அலரால் வளர்வதாயிற்று; அந்த அலர் இல்லையானால் அது தன் தன்மை இழந்து சுருக்கிப் போய்விடும்.

கொஞ்சம் கொஞ்சமாய்ப்
போதையேற்றிக் கொ(ள்/ல்)கிறதே!
இது கள்ளா? காதலா?


களித்தொறுங் கள்ளுண்டல் வேட்டற்றாற் காமம்
வெளிப்படுந் தோறும் மினிது.

காமம் அலரால் வெளிப்பட வெளிப்பட இனியதாதல், கள்ளுண்பவர் கள்ளுண்டு மயங்க மயங்க அக்கள்ளுண்பதையே விரும்பினாற் போன்றது.

உன்னை ஒருமுறைச் சந்தித்ததற்கே
நிலவைத் தொட்டவனைப் போல
ஊருக்குள் எனக்குப் பெருமை!




கண்டது மன்னு மொருநா ளலர்மன்னுந்
திங்களைப் பாம்புகொன் டற்ற.

காதலரைக் கண்டது ஒருநாள்தான்; அதனால் உண்டாகிய அலரோ, திங்களைப் பாம்பு கொண்டசெதி போல் எங்கும் பரந்துவிட்டது.

ஊரார்ப் பேச்சில் எருவுண்டு
தாயின் வசையில் நீர்குடித்து
பயந்து பயந்து பூக்கிறது உன் காதல்.




ஊரவர் கௌவை யெருவாக அன்னைசொல்
நீராக நீளுமிந் நோய்.

இந்தக் காமநோய் ஊராரின் அலர் தூற்றலே எருவாகவும் அன்னை கடிந்து சொல்லும் கடுஞ்சொல்லே நீராகவும் கொண்டு செழித்து வளர்கின்றது.

நம்மை சேர்த்து வைத்துப் பேசியேப்
பிரிக்கப் பார்க்கிறது உலகம்.
நெய்யூற்றியா அணையும் நெருப்பு?



நெய்யா லெரிநுதுப்பே மென்றற்றாற் கௌவையாற்
காமம் நுதுப்பே மெனல்.

அலர் கூறுவதால் காமத்தை அடக்குவோம் என்று முயலுதல், நெய்யால் நெருப்பை அவிப்போம் என்று முயல்வதைப் போன்றது.

வெட்கம் கெட்டுப் பேசுமுலகம்.
அதற்கெல்லாம் நீ வெட்கப்படாதே!
வெட்கப் படுவதென்றால்
என்னிடம் மட்டும் வெட்கப்படு!



அலர்நாண லொல்வதோ அஞ்சலோம் பென்றார்
பலர்நான நன்ந்தக் கடை.

அஞ்சவேண்டா மென்று அன்று உறுதி கூறியவர் இன்று பலரும் நாணும்படியாக நம்மைவிட்டுப் பிரிந்தால், அதனால் அலருக்கு நாணியிருக்க முடியுமோ?

ஊருக்கேத் தெரிந்தபின்னும்
வீட்டில் சம்மதிக்கவில்லையென்றால்…
ஓடிப்போகலாமா என்கிறாய்.
என்னிடம் வண்டியிருக்கிறதென்கிறேன்.



தாம்வேண்டி நல்குவர் காதலர் யாம்வேண்டிற்
கௌவை யெடுத்ததிவ் வூர்.

யாம் விரும்புகின்ற அலரை இவ்வூரார் எடுத்துக் கூறுகின்றனர். அதனால் இனிமேல் காதலர் விரும்பினால் விரும்பியவாறு அதனை உதவுவார்.

கருத்துகள் இல்லை: