புதன், 8 செப்டம்பர், 2010

இது காதல் பூக்கும் மாதம் – முதல் பகுதி

நண்பர்களே இது திருக்குறளுக்கான உரையுமல்ல, மரபுக்கவிதையிலிருந்து புதுக்கவிதைக்கான மொழிபெயர்ப்புமல்ல. ஏனென்றால் திருக்குறளின் பொருள் பார்த்து மட்டும் நான் இதை எழுதவில்லை. ஏதாவது ஒரு கருவை மட்டும் எடுத்துக்கொண்டு எனக்குத் தெரிந்த வடிவத்தில் எழுதியிருக்கிறேன். உங்கள் கருத்தையும் சொல்லுங்கள்

தனிப்படர் மிகுதி - காதல் பூக்கும் மாதம் - 110

11. தனிப்படர் மிகுதி

உன் நட்பில் விளைந்து
உன்னைக் காதலிக்கும்போது மலர்ந்து
உன்னால் காதலிக்கப்படும்போது கனிகிறது
என் காதல்!



தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே
காமத்துக் காழில் கனி.

தம்மால் விரும்பப்படும் காதலர், தம்மை விரும்புகிற பேறு பெற்றவர் விதையில்லாத பழத்தைப் போன்ற காதல் வாழ்க்கையின் பயனைப் பெற்றவராவார்.


கோடைமழையைப் போல
நிகழ்கிறது நம் சந்திப்பு…
சந்திக்கும்போதெல்லாம்
அடைமழையாய்ப் பொழிகிறது
காதல்!


வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு
வீழ்வார் அளிக்கும் அளி.

காதலர்கள் ஒருவரையொருவர் உரிய நேரத்தில் சந்தித்து அன்பு பொழிவது, வாழ்வதற்குத் தேவையான பருவமழை பொழிவது போன்றதாகும்.

காதலில்லாத
இல்வாழ்க்கை…
வாழ்க்கையில்லை!



வீழுநர் வீழப் படுவார்க் கமையுமே
வாழுநம் என்னும் செருக்கு.

காதலன்பில் கட்டுண்டு பிரியாமல் இணைந்திருப்பவர்களுக்குத்தான் இன்புற்று வாழ்கிறோம் எனும் பெருமிதம் ஏற்படும்.


நீ பிரிந்து போனதிலிருந்து
உன்னிடம் கோபித்துக் கொண்டு
என்னிடம் வந்துவிட்டது
நம் காதல்!


வீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார்
வீழப் படாஅர் எனின்.

விரும்பப்படாத நிலை ஏற்படின், அந்தக் காதலர் நட்புணர்வு இல்லாதவராகவே கருதப்படுவார்.

நீ காதலிக்காவிட்டால் பரவாயில்லை
உனக்கும் சேர்த்து
நானே காதலித்து விட்டுப் போகிறேன்…



நாம்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோ
தாம்காதல் கொள்ளாக் கடை.

நான் விரும்பிக் காதல் கொள்வது போன்று அவர் என்னை விரும்பிக் காதல் கொள்ளாத நிலையில் அவரால் எனக்கு என்ன இன்பம் கிடைக்கப் போகிறது?


நானுன்னைக் காதலிக்க…
நீயென்னைப் பிரிய…
ஊனமாய் நிற்கிறது!
நம் காதல்…



ஒருதலையான் இன்னாது காமங்காப் போல
இருதலை யானும் இனிது.

காவடித் தண்டின் இரண்டு பக்கங்களும் ஒரே அளவு கனமாக இருப்பதுபோல், காதலும் ஆண், பெண் எனும் இருவரிடத்திலும் மலர வேண்டும்; ஒரு பக்கம் மட்டுமே ஏற்படும் காதலால் பயனுமில்லை; துயரமும் உருவாகும்.


இந்தக் காதலும்
பெண்பால்தான் போல…
எல்லாத் துயரையும்
எனக்கேத் தருகிறது!



பருவரலும் பைதலும் காணான்கொல் காமன்
ஒருவர்கண் நின்றொழுகு வான்.

காமன், ஒரு பக்கமாக மட்டும் இருப்பதால், என்னைக் காதல் நோய் வருத்துவதையும், என் மேனியில் பசலை படர்வதையும் கண்டு கொள்ளமாட்டான் போலும்!


உன் வார்த்தைகளைக் கேட்க முடியாமல்,
மரணித்தது என் செவி மட்டுமல்ல…
இதயமும்தான்!



வீழ்வாரின் இன்சொல் பெறாஅ துலகத்து
வாழ்வாரின் வன்கணார் இல்.

பிரிந்து சென்ற காதலரிடமிருந்து ஓர் இனிய சொல்கூட வராத நிலையில், உலகில் வாழ்கின்றவரைப் போல், கல் நெஞ்சம் உடையவர் யாரும் இருக்க முடியாது.


நீ துரத்த துரத்த
உன் பின்னேயே வருகிறது இந்த மனம்…
நீ வளர்க்கும்
செல்ல நாய்க்குட்டியைப் போல!



நசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட்
டிசையும் இனிய செவிக்கு.

என் அன்புக்குரியவர் என்னிடம் அன்பு காட்டாதவராகப் பிரிந்து இருப்பினும், அவரைப் பற்றிய புகழ் உரை என் செவிக்குச் செந்தேனாகும்.

கடலலைகளைக் கூட எண்ணிவிடலாம்.
உன்னையே எண்ணிக் கொண்டிருக்கும்
என் நினைவலைகளை?


உறாஅர்க் குறுநோய் உரைப்பாய் கடலைச்
செறாஅஅய் வாழிய நெஞ்சு.

நெஞ்சமே! நீ வாழ்க! உன்னிடம் அன்பு இல்லாதவரிடம் உனது துன்பத்தைச் சொல்லி ஆறுதல் பெறுவதைக் காட்டிலும் கடலைத் தூர்ப்பது எளிதான வேலையாகும்

நினைந்தவர் புலம்பல் - காதல் பூக்கும் மாதம் - 120

12. நினைந்தவர் புலம்பல்

உன் நினைவுக(ள்)ளைக்
குடித்து குடித்து
போதையிலேயே இருக்கிறது
இந்த மனது.


உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்
கள்ளினும் காமம் இனிது.

உண்டபோது மட்டும் மகிழ்ச்சி தரும் கள்ளைவிட நினைத்தாலே நெஞ்சினிக்கச் செய்யும் காதல் இன்பமானதாகும்.

என்னையும் உன்னையும்
காலம் வந்து பிரித்தது.
எனக்குள் இருக்கும் உன்னை
யார் வந்து பிரிப்பார்?


எனைத்தொன் றினிதேகாண் காமந்தாம் வீழ்வார்
நினைப்ப வருவதொன் றில்.

விரும்பி இணைந்த காதலரை நினைத்தலால், பிரிவின் போது வரக்கூடிய துன்பம் வருவதில்லை எனவே எந்த வகையிலும் காதல் இனிதேயாகும்.

நிற்காமல் வருகிற விக்கலைப் போல
மீண்டும் மீண்டும் உன்னிடம் வருகிறேன்.
வருவது போல வராமல் போகிற தும்மலாய்
என்னைவிட்டுப் போகிறாய்.

நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல்
சினைப்பது போன்று கெடும்.

வருவது போலிருந்து வராமல் நின்று விடுகிறதே தும்மல்; அதுபோலவே என் காதலரும் என்னை நினைப்பது போலிருந்து, நினைக்காது விடுகின்றாரோ?

உன் முகவரி கேட்பவரிடம்
என் இதயத்தை காட்டு!
என் முகவரி கேட்பவரிடம்
உன் இதயத்தை…???


யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத் தெந்நெஞ்சத்
தோஒ உளரே அவர்.

என் நெஞ்சைவிட்டு நீங்காமல் என் காதலர் இருப்பது போல, அவர் நெஞ்சை விட்டு நீங்காமல் நான் இருக்கின்றேனா?

என் இதயவீட்டில்
உன்னைக் குடிவைத்துவிட்டு
உன் மனவாசலில்
காத்திருக்கிறேன்
.

தம்நெஞ்சத் தெம்மைக் கடிகொண்டார் நாணார்கொல்
எம்நெஞ்சத் தோவா வரல்.

அவருடைய நெஞ்சில் எமக்கு இடம் தராமல் இருப்பவர்; எம் நெஞ்சில் மட்டும் இடைவிடாமல் வந்து புகுந்து கொள்வதற்காக வெட்கப்படமாட்டார் போலும்.

என் உயிரை
நழுவாமல் இறுக்கிப் பிடித்திருக்கிறது
உன் நினைவுக் கயிறு.

மற்றியான் என்னுளேன் மன்னோ அவரொடுயான்
உற்றநாள் உள்ள உளேன்.

நான் அவரோடு சேர்ந்திருந்த நாட்களை நினைத்துத் தான் உயிரோடு இருக்கிறேன்; வேறு எதை நினைத்து நான் உயிர்வாழ முடியும்?

நினைத்துக் கொண்டிருந்தால்
உன்னிடமே போகிறது மனமும்…
மறக்க நினைத்தால்
என்னைவிட்டே போகிறது உயிரும்…
விலகிய பிறகு, உன்னை
நினைப்பதா? மறப்பதா?


மறப்பின் எவனாவன் மற்கொல் மறப்பறியேன்
உள்ளினும் உள்ளம் சுடும்.

மறதி என்பதே இல்லாமல் நினைத்துக் கொண்டிருக்கும் பொழுதே பிரிவுத்துன்பம் சுட்டுப் பொசுக்குகிறதே! பினைக்காமல் மறந்துவிட்டால் என்ன ஆகுமோ?

பேசவேண்டாமென்று சொன்னதைப் போல
உன்னை நினைக்கக்கூடாதென்றும் சொல்லிவிடாதே.
காதல்தான் இல்லை, உயிராவது மிஞ்சட்டும்!


எனைத்து நினைப்பினும் காயார் அனைத்தன்றோ
காதலர் செய்யும் சிறப்பு.

எவ்வளவு அதிகமாக நினைத்தாலும், அதற்காகக் காதலர் என் மீது சினம் கொள்ளமாட்டார். அவர் எனக்குச் செய்யும் பெரும் உதவி அதுவல்லவா?

உன்னையும் என்னையும்
பிரித்துப் பார்க்கத் தெரியவில்லை
என்றவள் பிரிந்தே போய்விட்டாய்…
என்னை விட்டு உன்னோடு வந்து
கொண்டிருக்கிறது
என் மனமும், உயிரும்!


விளியுமென் இன்னுயிர் வேறல்லம் என்பார்
அளியின்மை ஆற்ற நினைந்து.

“நாம் ஒருவரே; வேறு வேறு அல்லர்.” எனக்கூறிய காதலர் இரக்கமில்லாதவராக என்னைப் பிரிந்து சென்றுள்ளதை நினைத்து வருந்துவதால் என்னுயிர் கொஞ்சம் கொஞ்சமாகப் போய்க் கொண்டிருக்கிறது.

உன்னைப் பார்க்கும் ஆசையெல்லாம்
இந்த நிலவைப் பார்த்துத்
தீர்த்துக் கொள்கிறேன்
பௌர்ணமியன்று மட்டும்!


விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப்
படாஅதி வாழி மதி.

நிலவே! நீ வாழ்க; இணைபிரியாமலிருந்து, பிரிந்து சென்றுள்ள காதலரை நான் என் கண்களால் தேடிக் கண்டுபிடித்திடத் துணையாக நீ மறையாமல் இருப்பாயாக.

கனவுநிலை உரைத்தல் - காதல் பூக்கும் மாதம் - 130

13. கனவுநிலை உரைத்தல்

கனவிலும் முத்தங்களைக்
கொடுத்து என்னைக்
கடனாளியாக்குகிறாய்!



காதலர் தூதொடு வந்த கனவினுக்
கியாதுசெய் வேன்கொல் விருந்து.

வந்த கனவு காதலர் அனுப்பிய தூதுடன் வந்ததே; அந்தக் கனவுக்குக் கைம்மாறாக என்ன விருந்து படைத்துப் பாராட்டுவது?


நேரில் தான் உன்னோடு பேசமுடிவதில்லை.
கனவில் உன்னைக் கண்டாலாவது
உயிரோடிருப்பதைச் சொல்லலாம் என்றால்
உறங்காமல் அடம்பிடிக்கிறதே
இந்தக் கண்கள்!

கயலுண்கண் யானிரப்பத் துஞ்சின் கலந்தார்க்
குயலுண்மை சாற்றுவேன் மன்.

நான் வேண்டுவதற்கு இணங்கி என் மை எழுதிய கயல் விழிகள் உறங்கிடுமானால், அப்போது என் கனவில் வரும் காதலர்க்கு நான் இன்னமும் உயிரோடு இருப்பதைச் சொல்லுவேன்.


கனவில் மட்டும்தான்
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்…
உன்னையங்கு காண்பதால்!



நனவினான் நல்கா தவரைக் கனவினால்
காண்டலின் உண்டென் உயிர்.

நனவில் வந்து அன்பு காட்டாதவரைக் கனவிலாவது காண்பதால்தான் இன்னும் என்னுயிர் நிலைத்திருக்கிறது.


இனிமையானக் கனவெல்லாம்
நனவாகி விட்டு…
கொடுமையான நனவெல்லாம்
அதில் வரும்
கனவாகி விட்டாலென்ன?


கனவினான் உண்டாகும் காமம் நனவினான்
நல்காரை நாடித் தரற்கு.

நேரில் என்னிடம் வந்து அன்பு காட்டாத காதலரைத் தேடிக் கொண்டு வந்து காட்டுகிற கனவால் எனக்குக் காதல் இன்பம் கிடைக்கிறது.


வருகிற வரை புரிவதில்லை
காதலென்று!
கலைகிற வரை தெரிவதில்லை
அதுவும் கனவென்று!



நனவினாற் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான்
கண்ட பொழுதே இனிது.

காதலரை நேரில் கண்ட இன்பம் அப்போது இனிமை வழங்கியது போலவே, இப்போது அவரைக் கனவில் காணும் இன்பமும் இனிமை வழங்குகிறது!


மெல்ல உன் விரல் பிடித்து
செல்லமாய் சில சொடுக்கெடுத்து
மெதுவாய்க் கூந்தல் கோதி
நெற்றியில் முத்தமிட நெருங்குகையில்
கலைகிறது…கனவு!



நனவென ஒன்றில்லை ஆயின் கனவினாற்
காதலர் நீங்கலர் மன்.

நனவு மட்டும் திடிரென வந்து கெடுக்காமல் இருந்தால், கனவில் சந்தித்த காதலர் பிரியாமலே இருக்க முடியுமே.


நனவில் வராமல் கொல்கிறாய்.
கனவில் வந்து கொல்கிறாய்.

நானவினான் நல்காக் கொடியார் கனவினான்
என்னெம்மைப் பீழிப் பது.

நேரில் வந்து அன்பு காட்டாத கொடிய நெஞ்சமுடையவர், கனவில் வந்து பிரிவுத் துயரைப் பெரிதாக்குவது என்ன காரணத்தால்?


நான் தூங்கும்போது
கனவில் நெருங்கி வந்து
தோள் சாய்ந்தவள்
விழித்துப் பார்த்தால் காணவில்லை…
வழியெங்கும் தேடினால்…
நிம்மதியாய் உறங்கிக் கொண்டிருக்கிறாய்
என் இதயமெத்தையில்!



துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால்
நெஞ்சத்தார் ஆவர் விரைந்து.

தூக்கத்தில் கனவில் வந்து என் தோள் மீது சாய்ந்து இன்பம் தந்தவர், விழித்தபோது எங்கும் போய் விடவில்லை; என் நெஞ்சில் தாவி அமர்ந்து கொண்டார்.


கனவு மட்டும் இல்லையென்றால்
உன்னைக் காண்பது
கனவாகவேப் போயிருக்கும்!



நனவினான் நல்காரை நோவர் கனவினான்
காதலர்க் காணா தவர்.

கனவில் காதலரைக் காணாதவர்கள்தான் அவர் நேரில் வந்து காணவில்லையே என்று நொந்து கொள்வர்.


நாம் பிரிந்துவிட்டோமென்று
சொல்கிறவர்க்கெல்லாம்
கனவு காணும் பழக்கமில்லையோ?


நனவினான் நம்நீத்தார் என்பர் கனவினான்
காணார்கொல் இவ்வூ ரவர்.

என் காதலர் என்னைப் பிரிந்திருப்பதாக அவரைக் குற்றம் சாட்டுகிறார்களே, இந்த ஊரார், பிரிந்து சென்ற தமது காதலனைக் கனவில் காண்பது கிடையாதோ?

பொழுதுகண்டு இரங்கல் - காதல் பூக்கும் மாதம் - 140

14. பொழுதுகண்டு இரங்கல்

உன்னை நினைக்கவைத்தே
என்னைக் கொல்கிறதே!
இது மாலையல்ல…
என் மரணத்தில் விழும் மாலை!



மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும்
வேலைநீ வாழி பொழுது.
நீ மாலைப் பொழுதாக இல்லாமல் காதலரைப் பிரிந்திருக்கும் மகளிர் உயிரைக் குடிக்கும் வேலாக இருப்பதற்காக உனக்கோர் வாழ்த்து!


அழுதழுது கண்ணெல்லாம் சிவந்து கிடக்கிறதே…
என்னைப் போல காதலியைப் பிரிந்துவருந்துகிறதா?
இந்த மாலைப் பொழுது.


புன்கண்ணை வாழி மருள்மாலை எங்கேள்போல்
வன்கண்ண தோநின் துணை.
மயங்கும்மாலைப் பொழுதே! நீயும் எம்மைப் போல் துன்பப்படுகின்றாயே! எம் காதலர் போல் உன் துணையும் இரக்கம் அற்றதோ?

உன்னோடு இருந்த காலங்களில்
பூனையைப் போல இருந்த மாலைப் பொழுது
நீ போன பின் புலியாய்ப் பாய்ந்து கொல்கிறது!


பனியரும்பிப் பைதல்கொள் மாலை துனியரும்பித்
துன்பம் வளர வரும்.
பக்கத்தில் என் காதலர் இருந்த போது பயந்து, பசலை நிறத்துடன் வந்த மாலைப் பொழுது, இப்போது என் உயிரை வெறுக்குமளவுக்குத் துன்பத்தை மிகுதியாகக் கொண்டு வருகிறது.

நீயில்லாத போது
மாலை அழகாய் வருவதில்லை…
மலையளவு துயராய் வருகிறது!



காதலர் இல்வழி மாலை கொலைக்களத்
தேதிலர் போல வரும்.
காதலர் பிரிந்திருக்கும்போது வருகிற மாலைப் பொழுது கொலைக் களத்தில் பகைவர் ஓங்கி வீசுகிற வாளைப்போல் வருகிறது.

புலரும்போதெல்லாம் காதலோடு மலரவைத்துவிட்டு
சாயும்போது மட்டும், உன்னைக் காணாத துயரில்
என்னை சாய்த்துவிட்டே சாய்கிறது
இந்தப் பொழுது!



காலைக்குச் செய்தநன் றென்கொல் எவன்கொல்யான்
மாலைக்குச் செய்த பகை.
மாலைப் பொழுதாகிவிட்டால் காதல் துன்பம் அதிகமாக வருத்துகிறது. அதனால் பிரிந்திருக்கும் காதலர் உள்ளம் “காலை நேரத்துக்கு நான் செய்த நன்மை என்ன? மாலை நேரத்துக்குச் செய்த தீமைதான் என்ன?” என்று புலம்புகிறது.

மாலைப் பொழுது…
இனிதிலும் இனிது – உன்னோடு இருந்தால்!
கொடிதிலும் கொடிது – நீயில்லையென்றால்!



மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத
காலை அறிந்த திலேன்.
மாலைக்காலம் இப்படியெல்லாம் இன்னல் விளைவிக்கக் கூடியது என்பதைக் காதலர் என்னை விட்டுப் பிரியாமல் இருந்த போது நான் அறிந்திருக்கவில்லை.

காலையில் அரும்பி
பகலில் மொட்டாகி
மாலையில் மலர்கின்றன
என் காதல் துயரங்கள்!


காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலருமிந் நோய்.
காதல் என்பது காலையில் அரும்பாகி, பகல் முழுதும் முதிர்ச்சியடைந்து, மாலையில் மலரும் ஒரு நோயாகும்.


நீ இருந்தால்
இரவின் இடிகளும் எனக்கு இன்னிசை…
நீ பிரிந்தால்
மாலையின் மெல்லிசையும் எனக்கு
கொல்லிசை!



அழல்போலும் மாலைக்குக் தூதாகி ஆயன்
குழல்போலும் கொல்லும் படை.
காதலர் பிரிவால் என்னைத் தணலாகச் சுடுகின்ற மாலைப்பொழுதை அறிவிக்கும் தூதாக வருவது போல வரும் ஆயனின் புல்லாங்குழலோசை என்னைக் கொல்லும் படைக்கருவியின் ஓசைபோல் அல்லவா காதில் ஒலிக்கிறது.


இந்த மாலைப் பொழுது
என்னை மயக்கவே செய்கிறது…
நீயிருந்தாலும், பிரிந்தாலும்!



பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு
மாலை படர்தரும் போழ்து.
என் அறிவை மயக்கும் மாலைப் பொழுது, இந்த ஊரையே மயக்கித் துன்பத்தில் ஆழ்த்துவது போல் எனக்குத் தோன்றுகிறது.


நீ வருவாயென
நான் தேக்கி தேக்கி வைத்தாலும்,
என்னுயிரை கரைத்துக் கொண்டே இருக்கிறது…
இந்த மாலைப் பொழுது!


பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை
மாயுமென் மாயா உயிர்.
பொருள் ஈட்டுவதற்கச் சென்றுள்ள காதலரை எண்ணி மாய்ந்து போகாத என்னுயிர், மயக்கும் இந்த மாலைப் பொழுதில் மாய்ந்து போகின்றது.

*******************************************
§§§§§§§§§§§§s.s.raj§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§
*******************************************

15. உறுப்புநலன் அழிதல்


என் கண்கள் – மலர்கள்.
உன் கண்கள் – வண்டுகள்.
தேக்கி வைத்த தேனெல்லாம்
கண்ணீராய் வீணாகிறது!

சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளி
நறுமலர் நாணின கண்.

பிரிவுத் துன்பத்தை நமக்களித்துவிட்டு நெடுந்தொலைவு சென்று விட்டாரேயென்று வருந்திடும் காதலியின் கண்கள் அழகிழந்துபோய், மலர்களுக்கு முன்னால் நாணிக் கிடக்கின்றன.


கண்ணீரும் ஒரு நாள் வற்றிப் போய்
செந்நீர் உதிர்க்கப் போகிறது
என் கண்கள்!


நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்
பசந்து பனிவாரும் கண்.

பசலை நிறம் கொண்டு நீர் பொழியும் கண்கள், விரும்பிய காதலர் அன்பு காட்டவில்லை யென்பதை சொல்லி காட்டுகின்றன.


ஓராண்டாய் ஏற்றி வைத்த உடம்பும்
உன்னைப் பிரிந்த ஒரு நாளில்
இளைத்துப் போனது!


தணந்தமை சால அறிவிப்ப போலும்
மணந்தநாள் வீங்கிய தோள்.

தழுவிக் கிடந்த போது பூரித்திருந்த தோள், இப்போது மெலிந்து காணப்படுவது; காதலன் பிரிவை அறிவிப்பதற்காகத்தான் போலும்.

உறுப்பு நலன் அழிதல் - காதல் பூக்கும் மாதம் - 150

15. உறுப்பு நலன் அழிதல்

வளையல் கழன்று விழுமளவுக்கு
இளைத்துப் போனதாய் சொல்கிறாய்
உன் வளையலில் நுழையுமளவுக்கு
நான் இளைத்ததை யாரிடம் சொல்ல?

பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித்
தொல்கவின் வாடிய தோள்.
பருத்திருந்த பருவத் தோள்கள் பழைய எழில் குலைந்து, பசும்பொன் வளையல்களும் கழன்று விழுகின்றன காதலனைப் பிரிந்து வாடுவதன் காரணமாக.

உன் அழகை அழிக்கிறது…
எனக்கு அழுகையை அளிக்கிறது…
நம் பிரிவு!



கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு
தொல்கவின் வாடிய தோள்.
வளையல்களும் கழன்று விழ, இருந்த அழகையும் இழந்த தோள்கள் என்னைப் பிரிந்திருக்கும் காதலரின் கொடுமையை ஊருக்கு உரைக்கின்றன.

உன்னை நினைத்தே
இளைத்துப் போகிறது உடல்…
உன்னால்தான் இளைக்கிறேனென உலகம் பேச
களைத்துப் போகிறது மனமும்!



தொடியொடு தோள்நேகிழ நோவல் அவரைக்
கொடியார் எனக்கூறல் நொந்து.
என் தோள்கள் மெலிவதையும், வளையல்கள் கழன்று விழுவதையும் காண்போர் என்னுடையவர் இரக்கமற்றவர் என இயம்புவது கேட்டு இதயம் நொந்து போகிறேன்.


என் வருத்தங்களை எல்லாம்
உன்னிடம் சொல்ல
வாய் வந்தால் மனம் தடுக்கிறது..
மனம் வந்தால் சொல் மறுக்கிறது!


பாடு பெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென்
வாடுதோட் பூசல் உரைத்து.
நெஞ்சே! இரக்கமற்று என்னைப் பிரிந்திருக்கும் அவருக்கும் வாடி வதங்கும் என் தோள்களின் துன்பத்தை உரைத்துப் பெருமை அடைய மாட்டாயோ?

எல்லோருக்கும் முன்னும்
என் கைகோர்த்தே நடக்கிறாய்…
கூச்சத்தில் நானும் கைகளையெடுத்தால்
அழ ஆரம்பித்து விடுகிறாய்.



முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது
பைந்தொடிப் பேதை நுதல்.
இறுகத் தழுவியிருந்த கைகளைக் கொஞ்சம் தளர்த்தவே அந்தச் சிறு இடைவெளியையும் பொறுத்துக் கொள்ள முடியாமல் காதலியின் நெற்றி, பசலைநிறம் கொண்டு விட்டது.

காற்று கூட
நம்மைப் பிரிக்கப் பார்க்கிறதென அழுகிறாய்.
வா! காற்றில்லாத கனவுலகம் ஓடிப் போகலாம்!



முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற
பேதை பெருமழைக் கண்.
இறுகத் தழுவியிருந்த போது, இடையே குளிர்ந்த காற்று நுழைந்ததால் அதையே ஒரு பிரிவு எனக் கருதிக் காதலியின் அகன்று நீண்ட கண்கள் பசலை நிறம் கொண்டன.

என் கன்னங்களில்
முத்தங்களாய் வழிந்தவள்
கண்ணீராய் வழிகிறாய்



கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே
ஒண்ணுதல் செய்தது கண்டு.
பிரிவுத் துயரால் பிறைநுதல் பசலை நிறமடைந்ததைக் கண்டு அவளது கண்களின் பசலையும் பெருந்துன்பம் அடைந்துவிட்டது

ஞாயிறு, 5 செப்டம்பர், 2010

நெஞ்சொடு கிளத்தல் - காதல் பூக்கும் மாதம் - 160

16. நெஞ்சொடு கிளத்தல்

காதல் நோய்க்கு
காரணம் யாரெனக் கேட்டால்
உன்னைக் காட்டியது…
மருந்து என்னவென்று கேட்டாலும்
உன்னையேக் காட்டுகிறது
உன்னைப் போல தான் குறும்பு செய்கிறது
இந்த மனமும்!


நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும்
எவ்வநோய் தீர்க்கு மருந்து.

எந்த மருந்தினாலும் தீராத என் காதல் நோய் தீர்ந்திட ஏதாவது ஒரு மருந்தை நினைத்துப் பார்த்து, நெஞ்சே! உன்னால் சொல்ல முடியுமா?

உன்னை எதிர்பார்த்து,
காற்றிருக்கும் வரை
காத்திருக்கும்…
இந்த மனம்!


காத லவரிலர் ஆகநீ நோவது
பேதமை வாழியென் நெஞ்சு.

அவர் நமது காதலை மதித்து நம்மிடம் வராத போது, நெஞ்சே! நீ மட்டும் அவரை நினைத்து வருந்துவது அறியாமையாகும்; நீ வாழ்க.

என் கவிதைகள்
எதனையும் வாசிக்காமல்
உன்னையே யாசித்துக் கொண்டிருக்கிறது
என் காதல்!

இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே பரிந்துள்ளல்
பைதல்நோய் செய்தார்கண் இல்.

பிரிவுத் துன்பம் தந்த காதலருக்கு நம்மிடம் இரக்கமில்லாத போது, நெஞ்சே! நீ மட்டும் இங்கிருந்து கொண்டு அவரை எண்ணிக் கலங்குவதால் என்ன பயன்?
தங்களை விட்டுவிட்டு
உன்னோடு போய்விட்டதாம்…
மனதிடம் சண்டையிடுகின்றன
கண்கள்!


கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத்
தின்னும் அவர்க்காணல் உற்று.

நெஞ்சே! நீ காதலரிடம் செல்லும் போது கண்களையும்கூட அழைத்துக்கொண்டு போ; இல்லையேல் அவரைக் காண வேண்டுமென்று என்னையே அவை தின்று விடுவது போல் இருக்கின்றன.

‘உன்’ , ‘என்’ என்பன போய்
‘நம்’ ஆனதால்…
உன்னையே நம்மையே
நினைத்திருக்கிறது என் நம் மனம்!


செற்றார் எனக்கை விடலுண்டோ நெஞ்சேயாம்
உற்றால் உறாஅ தவர்.

நெஞ்சே! நாம் விரும்பினாலும் நம்மை விரும்பி வராத அவர், நம்மை வெறுத்து விட்டார் என நினைத்து அவர் மீது கொண்ட காதலைக் கைவிட்டு விட முடியுமா?


உன்னை நோக்கி வரும்
என் சின்னக் கோபங்களும்
உன் புன்னகையைப் பார்த்ததும்
மன்னிப்போடு மண்டியிடுகின்றன!

கலந்துணர்த்தும் காதலர்க் கண்டாற் புலந்துணராய்
பொய்க்காய்வு காய்தியென் நெஞ்சு.

நெஞ்சே! கூடிக் கலந்து ஊடலை நீக்கும் காதலரைக் கண்டால் ஒரு தடவைகூடப் பிணங்கியறியாத நீ இப்போது அவர் மீது கொள்ளுகிற கோபம் பொய்யானது தானே?

இந்த மனமும்
உன்னைப் பற்றியே
புலம்பிக் கொண்டிருந்தால்…
என்னைப் பற்றி
நான் யாரிடம் புலம்ப?



காமம் விடுவொன்றோ நாண்விடு நன்னெஞ்சே
யானோ பொறேனிவ் விரண்டு.

நல்ல நெஞ்சமே! ஒன்று காதலால் துடிப்பதையாவது விட்டு விடு; அல்லது அதனைத் துணிந்து சொல்ல முடியாமல் தடுக்கும் நாணத்தையாவது விட்டு விடு. இந்த இரண்டு செய்லகளையும் ஒரே நேரத்தில் தாங்கிக் கொள்ள என்னால் முடியாது.

“பிரிந்து விட்டாள்”, “பிரிந்து விட்டாள்” என்று புலம்பிக் கொண்டே
உன் பின்னேப் போய்க் கொண்டிருக்கிறதே இந்த இதயம்…
இனியெப்படி நான் வாழ்வது?

பரிந்தவர் நல்காரென் றேங்கிப் பிரிந்தவர்
பின்செல்வாய் பேதையென் நெஞ்சு.

நம்மீது இரக்கமின்றிப் பிரிந்து விட்டாரேயென்று ஏங்கிடும் அதே வேளையில் பிரிந்தவர் பின்னாலேயே சென்று கொண்டிருக்கும் என் நெஞ்சம் ஓர் அறிவற்ற பேதை போன்றதாகும்.

உன்னைத் தொலைத்து விட்டு,
இப்போது உன்னைத் தேடியே
நானும் தொலைந்து போகிறேன்.


உள்ளத்தார் காத லவராக உள்ளிநீ
யாருழைச் சேறியென் நெஞ்சு.

உள்ளத்திலேயே காதலர் குடி கொண்டிருக்கும்போது, நெஞ்சமே! நீ அவரை நினைத்து வெளியே எவரிடம் தேடி அலைகிறாய்?


என் எடையும்
உன் எடைக்கு சமமாகி விட்டது!
மனதில் உன்னை சுமக்கும் போதும்…



துன்னாத் துறந்தாரை நெஞ்சத் துடையேமா
இன்னும் இழத்தும் கவின்.

சேராமல் பிரிந்து சென்ற காதலரைச் சிந்தையில் வைத்திருப்பதால் மேலும் மேனியெழில் இழந்து மெலிந்து அழிய வேண்டியுள்ளது.

நிறையழிதல் - காதல் பூக்கும் மாதம் - 170

17. நிறையழிதல்

நீயிருந்தவரை உனக்கு அடங்கிக் கிடந்துவிட்டு
நீ பிரிந்ததும் என்னையே அடக்குகிறது
காதல்.


காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும்
நாணுத்தாழ் வீழ்த்த கதவு.

காதல் வேட்கை இருக்கிறதே, அது ஒரு கோடரியாக மாறி, நாணம் எனும் தாழ்ப்பாள் போடப்பட்ட மன அடக்கம் என்கிற கதவையே உடைத்தெறிந்து விடுகின்றது.

நள்ளிரவிலும் விழித்தெழிந்து
கண் கசக்கினால்
நீ தான் தெரிகிறாய்.


காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை
யாமத்தும் ஆளும் தொழில்.

காதல் வேட்கை எனப்படும் ஒன்று இரக்கமே இல்லாதது; ஏனெனில் அது என் நெஞ்சில் நள்ளிரவிலும் ஆதிக்கம் செலுத்தி அலைக்கழிக்கிறது.

காதலும் தும்மலும்
ஒன்றுதான் என்றேன்.
ஒரு முறை தும்மிவிட்டு
விலகி விட்டாய்.

மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்பின்றித்
தும்மல்போல் தோன்றி விடும்.

எவ்வளவுதான் அடக்க முயன்றாலும் கட்டுப்படாமல் தும்மல் நம்மையும் மீறி வெளிப்படுகிறதல்லவா; அதைப் போன்றதுதான் காதல் உணர்ச்சியும்; என்னதான் மறைத்தாலும் காட்டிக் கொடுத்துவிடும்.

இலை மறை காயாக இருந்துவிட்டு
இப்போது பறவை கொத்தும் கனியாகிவிட்டது
நம் காதல்!


நிறையுடையேன் என்பேன்மன் யானோவென் காமம்
மறையிறந்து மன்று படும்.

மன உறுதிகொண்டவள் நான் என்பதே என் நம்பிக்கை; ஆனால் என் காதல், நான் மறைப்பதையும் மீறிக்கொண்டு மன்றத்திலேயே வெளிப்பட்டு விடுகிறதே.

அடித்துவிட்டு ஓடுகிற குழந்தையைத்
திருப்பியா அடிக்கிறோம்?
ஒரு முத்தம்தானே கொடுக்கிறோம்?
நீ – குழந்தை.
என் காதல் – முத்தம்.



செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோய்
உற்றார் அறிவதொன் றன்று.

தம்மைப் பிரிந்து சென்ற காதலரைப் பகையாகக் கருதி அவரைத் தொடர்ந்து மன அடக்கம், காதல் நோயுற்றவர்க்கு இருப்பதில்லை.

நீ விலகியதும்
உன்னிடமிருந்து என்னிடம் ஓடி வருகிறது காதல்.
என்னிடமிருந்து உன்னிடம் ஓடிப் போகிறது என் இதயம்!


செற்றவர் பின்சேறல் வேண்டி அளித்தரோ
எற்றென்னை உற்ற துயர்.

வெறுத்துப் பிரிந்ததையும் பொறுத்துக் கொண்டு அவர் பின்னே செல்லும் நிலையை என் நெஞ்சுக்கு ஏற்படுத்திய காதல் நோயின் தன்மைதான் என்னே.
‘முத்தமிடுகையில்
இதழ்களைத் திறக்கிறாய்…ஆனால்
கண்களை மூடிக் கொள்கிறாய்’
என்று சொன்னதுதான் தாமதம்…
கண்களையும் அகலத் திறந்து
ஒரு முத்தம் கொடுத்துவிட்டு
முகத்தையே மூடிக் கொண்டாய்!


நாணென ஒன்றோ அறியலம் காமத்தால்
பேணியார் பெட்ப செயின்.

நமது அன்புக்குரியவர் நம்மீது கொண்ட காதலால் நமக்கு விருப்பமானவற்றைச் செய்யும்போது, நாணம் எனும் ஒரு பண்பு இருப்பதையே நாம் அறிவதில்லை.


“என்னிடம் என்ன பிடித்திருக்கிறது” என்றாய்.
“உன்னிடம் எதுவும் பிடிக்கவில்லை” என்றேன்.
திரும்பிக் கொண்டாய்.
“மொத்தமாய் உன்னையேப் பிடித்த பிறகு
உன்னிடம் எது பிடிக்கிறதென தனியாக எப்படி
சொல்ல?”



பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோநம்
பெண்மை உடைக்கும் படை.

நம்முடைய பெண்மை எனும் உறுதியை உடைக்கும் படைக்கலனாக இருப்பது, பல மாயங்களில் வல்ல கள்வராம் காதலரின் பணிவான பாகுமொழியன்றோ?


கழுத்தைப் பிடித்து
சண்டையிட வந்தவன்
உன்னைப் பார்த்ததும்
கட்டிப்பிடிக்கிறேன்…
உன் வெட்கத்தை!

புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம்
கலத்தல் உறுவது கண்டு.

ஊடல் கொண்டு பிணங்குவோம் என நினைத்துதான் சென்றேன்; ஆனால் என் நெஞ்சம் என்னை விடுத்து அவருடன் கூடுவதைக் கண்டு என் பிடிவாதத்தை மறந்து தழுவிக் கொண்டேன்.

நீ விலகியதால்
காட்டுத்தீயாய் எரிந்து கொண்டிருந்த என் கோபம்
உன்னுடைய ஒரு துளி கண்ணீரில் அணைந்தது.

நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க் குண்டோ
புணர்ந்தூடி நிற்பேம் எனல்.

நெருப்பிலிட்ட கொழுப்பைப் போல் உருகிடும் நெஞ்சம் உடையவர்கள், கூடிக் களித்தபின் ஊடல் கொண்டு அதில் உறுதியாக இருக்க முடியுமா?

அவர்வயின் விதும்பல் - காதல் பூக்கும் மாதம் - 180

18. அவர்வயின் விதும்பல்

உன்னையே எதிர்பார்த்து
என் கண்ணெறிந்த கனலால்
வீதியில் தீ.

வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற
நாளொற்றித் தேய்ந்த விரல்.

வருவார் வருவார் என வழி பார்த்துப் பார்த்து விழிகளும் ஒளியிழந்தன; பிரிந்து சென்றுள்ள நாட்களைச் சுவரில் குறியிட்டு அவற்றைத் தொட்டுத் தொட்டு எண்ணிப் பார்த்து விரல்களும் தேய்ந்தன.

என் மனதுக்குத் தெரியாமல்
உன்னை நானும் மெதுவாய் விலக்க…
விலகிப் போகிறது என் உயிர்.
வேகமாய் இறுக்கிப் பிடித்துக் கொள்கிறேன்…
உன்னையும், என்னுயிரையும்!


இலங்கிழாய் இன்று மறப்பினென் தோள்மேல்
கலங்கழியும் காரிகை நீத்து.

காதலரைப் பிரிந்திருக்கும் நான், பிரிவுத் துன்பம் வாராதிருக்க அவரை மறந்திருக்க முனைந்தால், என் தோள்கள் அழகு நீங்கி மெலிந்து போய் வளையல்களும் கழன்று விழுவது உறுதியடி என் தோழி.

நீ வரும் வரை
நுழையக்கூடாதென உத்தரவிட்டிருக்கிறேன்.
என் வீட்டு வாசலில்
மன்றாடிக் கொண்டிருக்கும்
மரணத்திடம்
!


உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார்
வரல்நசைஇ இன்னும் உளேன்.

ஊக்கத்தையே உறுதுணையாகக் கொண்டு வெற்றியை விரும்பிச் சென்றுள்ள காதலன், திரும்பி வருவான் என்பதற்காகவே நான் உயிரோடு இருக்கிறேன்.

உள்ளேயிருந்தால் உன் வருகையைப்
பார்க்க முடியாமல் போய்விடுமாம்.
மேலே வந்து
கண்வழியே எட்டி எட்டி பார்க்கிறது
என் இதயம்.



கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக்
கோடுகொ டேறுமென் நெஞ்சு.

காதல் வயப்பட்டுக் கூடியிருந்து பிரிந்து சென்றவர் எப்போது வருவார் என்று என் நெஞ்சம், மரத்தின் உச்சிக் கொம்பில் ஏறிப் பார்க்கின்றது.

கருப்பு வெள்ளையாய்
இருக்கும் என் கண்களும்
உனைக் கண்டால்
வண்ணங்களாய்ப் பூக்கும்!


காண்கமன் கொண்கனைக் கண்ணாரக் கண்டபின்
நீங்குமென் மென்தோள் பசப்பு.

கண்ணார என் கணவனைக் காண்பேனாக; கண்டபிறகே என் மெல்லிய தோளில் படர்ந்துள்ள பசலை நிறம் நீங்கும்.

நீண்ட பிரிவுக்குப் பிறகு சந்தித்ததும்,
கட்டிப் பிடித்து முத்த மழை பொழிகிறாள்.
“எங்கிட்ட பேசவே மாட்டேன்னு சொன்ன?” என்று கேட்டால்
“பேச மாட்டேன்னு தான சொன்னேன்” என்று
சுவரில் எழுதிக் காட்டுகிறாளே… இவளை என்ன செய்ய?
என் பங்குக்கு நானும் கொஞ்(சு)சம் முத்தமிடுவதைத் தவிர…


வருகமன் கொண்கண் ஒருநாட் பருகுவன்
பைதல்நோய் எல்லாம் கெட.

என்னை வாடவிட்டுப் பிரிந்துள்ள காதலன், ஒருநாள் வந்துதான் ஆகவேண்டும். வந்தால் என் துன்பம் முழுவதும் தீர்ந்திட அவனிடம் இன்பம் துய்ப்பேன்.

பிரிந்தவர் கூடும்பொழுது
வார்த்தை கை விடுமாம்…
சரி விடு!
முத்தம் கை கொடுக்கும்!



புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல்
கண்ணன்ன கேளிர் வரின்.

கண்ணின் மணியாம் என் காதலர் வந்தவுடன், பிரிந்திருந்த துயரின் காரணமாக அவருடன் ஊடல், கொள்வேனோ? அல்லது கட்டித் தழுவிக் கொள்வேனோ? அல்லது ஊடுதல் கூடுதல் ஆகிய இரண்டையும் இணைத்துச் செய்வேனோ? ஒன்றுமே புரியவில்லையே எனக்கு; அந்த இன்பத்தை நினைக்கும்போது.

வெற்றி பெற்று
உன்னிடம் வாழ்த்துப் பெறுவது இன்பம்தான்!
ஆனாலும் தோற்கும்போதெல்லாம்
ஆதரவாய் நீ தலை கோதுகிறாயே…
அந்த சுகத்துக்கே
எல்லாவற்றிலும் தோற்றுப் போகலாம்!


வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து
மாலை அயர்கம் விருந்து.

தலைவன், தான் மேற்கொண்டுள்ள செயலில் வெற்றி பெறுவானாக; அவன் வெண்றால் என் மனைவியுடன் எனக்கு மாலைப்பொழுதில் இன்ப விருந்துதான்.

நாம் சேர்ந்திருந்த பொழுதுகளில்
நொடிமுள் வேகத்தில் மணிமுள்ளும்
பிரிந்திருக்கும் பொழுதுகளில்
மணிமுள் வேகத்தில் நொடிமுள்ளும் சுற்றுகின்றன.
இந்த கடிகாரத்தைப் பழுது பார்க்க வேண்டும்!


ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார்
வருநாள்வைத் தேங்கு பவர்க்கு.

நெடுந்தொலைவு சென்ற காதலர் திரும்பி வரும் நாளை எதிர்பார்த்து ஏங்குபவர்க்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு யுகமாகத் தோன்றும்.

தூக்கத்திலும்
தூக்கிக் கொஞ்சுகிறேன்
நீ தரும் துயரங்களை!



பெறினென்னாம் பெற்றக்கால் என்னாம் உறினென்னாம்
உள்ளம் உடைந்துக்கக் கால்.

துன்பத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல் மனம் நிலையிழந்து போயிவிடுமானால், பிறகு ஒருவரையொருவர் திரும்பச் சந்திப்பதனாலோ, சந்தித்துக் கூடவதினாலோ, என்ன பயன்?