வியாழன், 19 ஆகஸ்ட், 2010

காதல் பூக்கும் மாதம் - 20

2. குறிப்பறிதல்

ஒரு பார்வையில் சாம்பலாக்குகிறாய்…
மறு பார்வையிலோ
ஃபீனிக்ஸ் பறவையாய் மாற்றுகிறாய்!



இருநோக் கிவளுண்க ணுள்ள தொருநோக்கு
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து.

இவளுடைய மை தீட்டிய கண்களில் உள்ளது இருவகைப்பட்ட நோக்கமாகும்; அவற்றுள் ஒரு நோக்கம் நோய் செய்யும் நோக்கம்; மற்றொன்று அந் நோய்க்கு மருந்தாகும்.

என் காதல் கடலென்றிருந்தேன்…
அரைக்கண்ணில் பார்க்கும்
உன் கள்ளப் பார்வையில்
என் முழுக்காதலும் ஒரு துளியானது!

கண்களவு கொள்ளுஞ் சிறுநோக்கம் காமத்திற்
செம்பாக மன்று பெரிது.

கண்ணால் என்னை நோக்கிக் களவு கொள்கின்ற சுருங்கிய பார்வை காமத்தில் நேர்பாதி அன்று; அதைவிடப் பெரிய பகுதியாகும்.

உன் பார்வையில்
மழையாய்ப் பொழிகிறதென் ஆண்மை!
என் பார்வையில்அருவியாய்
வழிகிறது உன் வெட்கம்!
மழையிலும் அருவியிலும்
நனைகிறது நம் காதல்!


நோக்கினா ணோக்கி யிறைஞ்சினா ளஃதவள்
யாப்பினு ளட்டிய நீர்.

என்னை நோக்கினாள்; யான் கண்டதும் நோக்கித் தலைகுனிந்தாள்; அது அவள் வளர்க்கும் அன்பினுள் வார்க்கின்ற நீராகும்.

உன்னைப் பார்க்கிறேன்…
மண்ணைப் பார்க்கிறாய்!
விண்ணைப் பார்க்கிறேன்…
என்னைப் பார்க்கிறாய்!
என்னுள் சேர்த்தப் புன்னகையோ
உன்னுள் பூக்கிறது வெட்கத்தோடு!


யானோக்குங் காலை நிலனோக்கு நோக்காக்காற்
றானோக்கி மெல்ல நகும்.

யான் நோக்கும்போது அவள் நிலத்தை நோக்குவாள்; யான் நோக்காதபோது அவள் என்னை நோக்கி மெல்லத் தனக்குள் மகிழ்வாள்.

அரைக்கண்ணில் பார்த்தே
முழு உயிரையும் குடிக்கிறாய்.
இன்னும் நேராய்ப் பார்த்தால்?


குறிக்கொண்டு நோக்காமை யல்லா லொருகண்
சிறக்கணித்தாள் போல நகும்.

என்னை நேராக குறித்துப் பார்க்காத அத்தன்மையே அல்லாமல், ஒரு கண்ணைச் சுருக்கினவள் போல் என்னைப் பார்த்துத் தனக்குள் மகிழ்வாள்.

காதலைத் தவிர
எல்லாவற்றையும் பேசுகிறாய்.
ஆனால் காதலோடு!


உறாஅ தவர்போற் சொலினும் செறாஅர்சொல்
ஒல்லை யுணரப் படும்

புறத்தே அயலார்போல் அன்பில்லாத சொற்களைச் சொன்னாலும் அகத்தே பகையில்லாதவரின் சொல் என்பது விரைவில் அறியப்படும்.


நீ ஒளித்து ஒளித்து வைத்தாலும்
உன் பொய்க் கோபத்திலும் செல்ல முறைப்பிலும்
மெல்ல மெல்ல வெளிப்படுகிறது
உன் காதல்.


செறாஅச் சிறுசொல்லுஞ் செற்றார்போ னோக்கும்
உறாஅர்போன் னூற்றார் குறிப்பு.

பகைகொள்ளாத கடுஞ்சொல்லும், பகைவர்போல் பார்வையும் புறத்தே அயலார்போல் இருந்து அகத்தே அன்பு கொண்டவரின் குறிப்பாகும்.

நீ சிரிப்பது அழகு.
என்னைப் பார்த்து சிரிப்பது பேரழகு.
நான் பார்க்கும்போது சிரிப்பதின் அழகை
வருணிக்க ஒரு வார்த்தைக் கொடு.


அசையியற் குண்டாண்டோர் ஏஎர்யா னோக்காப்
பசையினள் பைய நகும்.

யான் நோக்கும்போது அதற்காக அன்பு கொண்டவளாய் மெல்லச் சிரிப்பாள்; அசையும் மெல்லிய இயல்பை உடைய அவளுக்கு அப்போது ஓர் அழகு உள்ளது.

பார்த்தும் பார்க்காமல் என் பார்வை,
பார்க்காததைப் போல பார்க்கும் உன் ்பார்வை,
காதல் நடத்துகிறது கண்ணாமூச்சி!

ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்
காதலார் கண்ணே யுள.

புறத்தே அயலார்போல் அன்பில்லாத பொதுநோக்கம் கொண்டு பார்த்தல், அகத்தே காதல் கொண்டவரிடம் உள்ள ஓர் இயல்பாகும்.

பார்வைகளே பாசையானபின்
வார்த்தைகள் வந்தும்
என்ன செய்யும்?


கண்ணோடு கண்ணிணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனு மில.

கண்களோடு கண்கள் நோக்கால் ஒத்திருந்து அன்பு செய்யுமானால் வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல்லாமற் போகின்றன.