3. புணர்ச்சி மகிழ்தல்
அழகு.இசை.சுவை.மணம்.ஸ்பரிசம்.
இப்படி நீ தரும் ஐம்புல
இன்பங்களுக்கும்
மேலாகத் தர என்னிடம் இருக்கிறது
காதல்!
கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியு மைம்புலனு
மொண்டோடி கண்ணே யுள.
கண்டும் கேட்டும் உண்டும் முகர்ந்தும் உற்றும் அறிகின்ற ஐந்து புலன்களாகிய இன்பங்களும் ஒளி பொருந்திய வளையல் அணிந்த இவளிடத்தில் உள்ளன.
காதலில் விழவும் வைக்கிறாய்.
காதலோடு எழவும் வைக்கிறாய்.
நீ நோயா? மருந்தா?
பிணிக்கு மருந்து பிறம னணியிழை
தன்னோய்க்குத் தானே மருந்து.
நோய்களுக்கு மருந்து வேறு பொருள்களாக இருக்கின்றன. ஆனால் அணிகலன் அணிந்த இவளால் வளர்ந்த நோய்க்கு இவளே மருந்தாக இருக்கின்றாள்.
உன் தோள் சாய்ந்திருந்த தனிமைப் பொழுதில்
“இப்படியே சொர்க்கம் போய் விடலாமா?” என்கிறாய்.
இப்போது மட்டும் எங்கிருக்கிறோம்?
தாம்வீழ்வார் மென்றோட் டுயிலி னினிதுகொல்
தாமரைக் கண்ணா னுலகு.
தாமரைக் கண்ணனுடைய உலகம், தாம் விரும்பும் காதலியரின் மெல்லிய தோள்களில் துயிலும் துயில்போல் இனிமை உடையதோ?
விலகினால் சுடும்,
நெருங்கினால் குளிரும் ஒரு தீ…
இவள் ஒருத்தி தான்!
நீங்கிற் றெறூஉங் குறுகுங்ஆற் றண்ணென்னுந்
தீயாண்டுப் பெற்றா ளிவள்.
நீங்கினால் சுடுகின்றது. அணுகினால் குளிர்ச்சியாக இருக்கின்றது. இத்தகைய புதுமையான தீயை இவள் எவ்விடத்திலிருந்து பெற்றாள்?
ஒரு தேவதையென்னைக் காதலிப்பாளென
சிறுவயதில் நானும் நினைத்ததுண்டு!
இன்றோ என் தோள்சாய்ந்தபடி
என்னோடு நடக்கிறாய் என் காதலியாக…
இதுதான் நினைத்தது ‘நடப்பது’என்பதா?
வேட்ட பொழுதி னவையவை போலுமே
தோள்தாழ் கதுப்பினா டோள்.
மலரணிந்த கூந்தலை உடைய இவளுடைய தோள்கள் விருப்பமான பொருள்களை நினைந்து விரும்பிய பொழுது அவ்வப் பொருள்களைப் போலவே இன்பம் செய்கின்றன.
தழுவும்போதெல்லாம்
என்னுள் நழுவுகிறாய்.
தோல் போர்த்திய அமிழ்தை
தோள் என்று நம்ப சொல்கிறாயா?
உறுதோறு றுயிர் தளிப்பத் தீண்டலாற் பேதைக்
கமிழ்தி னியன்றன தோள்.
பொருந்தும்போதெல்லாம் உயிர் தளிர்க்கும்படியாத் தீண்டுதலால் இவளுக்குத் தோள்கள் அமிழ்தத்தால் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
அணைத்துச் சேரும்போது,
“பகுத்துண்ணும் இன்பம் இதுவா?” என்றேன்.
இல்லையெனச் சொல்லி,
அணைத்துச் சேர்த்தாய் நம் உதடுகளை!
தம்மி லிருந்து தமதுபாத் துண்டற்றா
லம்மா வரிவை முயக்கு.
அழகிய மாமை நிறம் உடைய இவளுடைய தழுவுதல், தம்முடைய வீட்டிலிருந்து தாம் ஈட்டிய பொருளைப் பகுத்து உண்டாற் போன்றது.
இறுக்கி அணைக்கிறாய்.
மூச்சு வாங்குகிறது…
இடையில் அகப்பட்ட காற்று!
வீழு மிருவர்க் கினிதே வளியிடை
போழப் படாஅ முயக்கு.
காற்று இடையறுத்துச் செல்லாதபடி தழுவும், தழுவுதல், ஒருவரை ஒருவர் விரும்பிய காதலர் இருவர்க்கும் இனிமை உடையதாகும்.
நமக்குள்ளான சண்டையில்
யார் முதலில் விட்டுக் கொடுப்பதென
ஆரம்பிக்கிறது அடுத்த சண்டை…
ஊட லுணர்தல் புணர்த லிவைகாமங்
கூடியார் பெற்ற பயன்.
ஊடுதல். ஊடலை உணர்ந்து விடுதல். அதன்பின் கூடுதல் ஆகிய இவை காதல் வாழ்வு நிறைவேறப்பெற்றவர் பெற்ற பயன்களாகும்.
அணைத்துப் படித்தால்
எல்லாப் பக்கமும்
காதல் வழிகிற
கவிதைப் புத்தகம் நீ!
அறிதோ றறியாமை கண்டற்றால் காமம்
செறிதோறுஞ் சேயிழை மாட்டு.
செந்நிற அணிகலன்களை அணிந்த இவளிடம் பொருந்துந்தோறும் காதல் உணர்தல். நூற்பொருள்களை அறிய அறிய அறியாமை கண்டாற் போன்றது.
நீ தூங்க அனிச்சப்பூக்களைத் தூவினேன்,
கதறுகின்றனப் பூக்கள்…
உனக்கு வலிக்குமென!