வியாழன், 19 ஆகஸ்ட், 2010

காதல் பூக்கும் மாதம் - 10

நண்பர்களே இது திருக்குறளுக்கான உரையுமல்ல, மரபுக்கவிதையிலிருந்து புதுக்கவிதைக்கான மொழிபெயர்ப்புமல்ல. ஏனென்றால் திருக்குறளின் பொருள் பார்த்து மட்டும் நான் இதை எழுதவில்லை. ஏதாவது ஒரு கருவை மட்டும் எடுத்துக்கொண்டு எனக்குத் தெரிந்த வடிவத்தில் எழுதியிருக்கிறேன். உங்கள் கருத்தையும் சொல்லுங்கள்.

1 .தகையணங்குறுத்தல்


வெள்ளை சுடிதாரில் தேவதையாகிறாய்…
பச்சை, நீல வண்ணங்களில் மயிலாகிறாய்…
எப்பொழுது பெண்ணாவாய்?

அணங்குகொ லாய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலுமென் னெஞ்சு

தெய்வப் பெண்ணோ!மயிலோ?கனமாக குழை(காதணி) அணிந்த மனிதப் பெண்ணோ? என் நெஞ்சம் மயங்குகின்றதே!

உன்னைப் பார்க்கையில்,உன்னழகே இப்படித் தாக்குகிறதே…
நீ எதிர்பார்வையெல்லாம் பார்த்தால், என்னால் முடியாதடி!
அது உன் தலைமையில் ஒரு தேவதைப்படையே தாக்குவதைப்போல…

நோக்கினா ணோக்கெதிர் நோக்குத றாக்கணங்கு
தானைக்கொண் டன்ன துடைத்து.

இவள் என் நோக்கிற்கு எதிர் நோக்குதல், தானே தாக்கி வருத்தும் ஓர் அணங்கு, ஒரு சேனையையும் கொண்டு வந்து தாக்கினாற் போன்றது.


எமன் எப்படியிருப்பான்?
உன் வெட்கப் பார்வை வீசும் ‘பாச’க்கயிறு
உயிரை இறுக்கும் போது புரிகிறது.
உன்னைப் போலதான் இருப்பாள்!

பண்டெறியேன் கூற்றெ பதனை இனியறிந்தேன்பெண்டகையாற் பேரமர்க் கட்டு.

எமன் என்று சொல்லப்படுவதை முன்பு அறியேன்; இப்பொழுது கண்டறிந்தேன் ; அது பெண் தன்மையுடன் போர் செய்யும் பெரிய கண்களை உடையது.

எல்லா பாகங்களும் அழகாக வெட்கப்படும்போது
உன் பார்வை மட்டும் என் உயிரைக் குடிக்கிறதே
உனக்குள் ஏனிந்த முரண்பாடு?


கண்டா ருயிருண்ணுந் தோற்றத்தாற் பெண்டகைப்பேதைக் கமர்த்தன கண்.

பெண்தன்மை உடைய இந்தப் பேதைக்குக் கண்கள் கண்டவரின் உயிரை உண்ணும் தோற்றத்தோடு கூடி ஒன்றோடொன்று மாறுபட்டிருந்தன.

நீ பார்க்கும்போது
எமனாய் மாறி என்னைக் கொல்கிறது!
நான் பார்க்கும்போது
மானாய் மாறி அங்குமிங்கும் ஓடுகிறது!
நாம் ஒருவரை ஒருவர்
பார்த்துக்கொள்ளாத தருணங்களில் மட்டுமே
உன் கண்கள், கண்களாய் இருக்குமோ?


கூற்றமோ கண்ணோ பிணையோ மடவர
னோக்கமிம் மூன்று முடைத்து.

எமனோ? கண்ணோ? மானோ? இந்த இளம் பெண்ணின் பார்வை இந்த மூன்றன் தன்மையும் உடையதாக இருக்கின்றது.

புருவங்களே!
கொஞ்சம் இவள் கண்களை மறையுங்களேன்..
பார்த்தேக் கொல்கிறாளே!


கொடும்புருவங் கோடா மறைப்பி னடுங்கஞர்
செய்யல மன்னிவள் கண்.

வளைந்த புருவங்கள் கோணாமல் நேராக இருந்து மறைக்குமானால், இவளுடைய கணகள் யான் நடுங்கும்படியான துன்பத்தைச் செய்யமாட்டா.

உன் துப்பட்டாவிற்குத் தெரியுமா?
அது கோயில்யானையின் முகபடாமை
விட பெருமை வாய்ந்ததென்று?



கடாஅக் களிற்றின்மேற் கட்படா மாதர்
படாஅ முலைமேற் றுகில்.

மாதருடைய சாயாத மார்பின்மேல் அணிந்த ஆடை மதம் பிடித்த ஆண்யானையின்மேல் இட்ட முகபடாம் போன்றது.

உன் இருவிழிகளின் ஒளி தாங்காமல் தான்
நீ நிலம் நோக்கும் போதுமட்டும் உன்னைப் பார்க்கிறேன்!
ஆனால் உன் ஒற்றை நெற்றிப் பார்த்தே
என் இதயம் நொறுங்குகிறது!



ஒண்ணுதற் கோஒ வுடைந்ததே ஞாட்பினுள்
நண்ணாரும் முட்குமென் பீடு.

போர்க்களத்தில் பகைவரும் அஞ்சுதற்குக் காரணமான என் வலிமை, இவளுடைய ஒளி பொருந்திய நெற்றிக்குத் தோற்று அழிந்ததே!

மற்ற பெண்களெல்லாம் கண்மை தீட்டினால்
நீ “இளமை” தீட்டி வருகிறாய் கண்ணுக்கு.
முகத்துக்கு மஞ்சள் பூசியும் அலுத்துவிட்டதா?
இப்படி வெட்கத்தைப் பூசிக் கொண்டு வருகிறாய்.
இதற்குமேலும் வேறென்ன வேண்டும் உன் முகத்துக்கு?


பிணையேர் மடநோக்கும் நாணும் முடையாட்
கணியவனோ ஏதில தந்து.

பெண்மானைப் போன்ற இளமைப் பார்வையும் நாணமும் உடைய இவளுக்கு, ஒரு தொடர்பும் இல்லாத அணிகளைச் செய்து அணிவது ஏனோ?

கள்ளைப் பருகினால்தான்
போதை தலைக்கேறுமாம்.
கள்ளி! உன்னைப் பார்த்தாலே
போதை மனதுக்கேறுகிறதே!



உண்டார்க் ணல்ல தடுநறாக் காமம்போற்
கண்டார் மகிழ்செய்த லின்று.

கள், தன்னை உண்டவரிடத்தில் அல்லாமல் காமத்தைப் போல் தன்னைக் கண்டவரிடத்தில் மயக்கத்தை உண்டாக்குவதில்லை.

கருத்துகள் இல்லை: