திங்கள், 30 ஆகஸ்ட், 2010

குறிப்பறிவுறுத்தல் - காதல் பூக்கும் மாதம் - 190

19. குறிப்பறிவுறுத்தல்

எல்லாவற்றையும் பங்கிடுவோம் என்றாய்.
நான் காதலைக் கொண்டு வந்தேன்.
நீ பிரிவைக் கொண்டு வந்தாய்.
கொண்டு வந்த பிரிவை என்னிடம் கொடுத்து விட்டு,
காதலை மட்டும் நீ வாங்கிக் கொள்ளவே வில்லை!


கரப்பினுங் கையிகந் தொல்லாநின் உண்கண்
உரைக்கல் உறுவதொன் றுண்டு.

வெளியில் சொல்லாமல் மறைக்கப் பார்த்தாலும், நிற்காமல் தடைகடந்து விழிகள் சொல்லக்கூடிய செய்தி ஒன்று உண்டு; அதுதான் பிரிவை விரும்பாத காதல்.

நீ பேரழகி என்று நான் பிதற்றுவதெல்லாம் பொய்தான்.
ஆனால் அதைக் கேட்டதும் வெட்கப்படுகிறாயே
அப்போதே அது உண்மையாகி விடுகிறது.


கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்குப்
பெண்நிறைந்த நீர்மை பெரிது.

கண்நிறைந்த அழகும் மூங்கில் போன்ற தோளும் கொண்ட என் காதலிக்குப் பெண்மைப் பண்பு நிறைந்திருப்பதே பேரழகாகும்.

நீ கலந்து கொள்ளும் அழகிப் போட்டியில் மட்டும்
போட்டியின்றி ஒரு மனதாகத் தேர்ந்தெடுத்து விடுகிறார்கள்
உன்னை
!

மணியில் திகழ்தரு நூல்போல் மடந்தை
அணியில் திகழ்வதொன் றுண்டு.

மறைந்திருக்கும் நூலைப்போல இந்த மடந்தையின் அழகுக்குள்ளே என்னை மயக்கும் குறிப்பு ஒன்று உளது.

நீ சிரிக்கும் போதெல்லாம்
வழுக்கி வழுக்கி விழுகிறேன்
உன் கன்னக் குழியில்.


முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை
நகைமொக்குள் உள்ளதொன் றுண்டு.

மலராத அரும்புக்குள் நறுமணம் அடங்கியிருப்பது போலத்தான் ஒரு பெண்ணின் புன்னகையென்ற அரும்புக்குள் அவளது காதலனைப்பற்றிய நினைவும் நிரம்பியிருக்கிறது.

என் ஆயுள் முழுவதுக்குமான
ஆனந்தம் முழுவதும் ஒளிந்திருக்கிறது
உன் அரை நொடிச் சிரிப்பில்!

செறிதொடி செய்திறந்த கள்ளம் உறுதுயர்
தீர்க்கும் மருந்தொன் றுடைத்து.

வண்ணமிகு வளையல்கள் அணிந்த என் வடிவழகியின் குறும்புத்தனமான பார்வையில், என்னைத் துளைத்தெடுக்கும் துன்பத்தைத் தீர்க்கும் மருந்தும் இருக்கிறது.

“மீண்டும் சந்தித்தால்
கட்டிப் பிடிப்பாயா?” என்றால்,
“ம்ம்ம்… மீண்டும் பிரியாமலிருக்க
பிடித்துக் கட்டுவேன்” என்கிறாள்.
இவளைக் கட்டிப் பிடித்துக் கட்ட வேண்டும்
காதலால்!


பெரிதாற்றிப் பெட்பக் கலத்தல் அரிதாற்றி
அன்பின்மை சூழ்வ துடைத்து.

ஆரத் தழுவி அளவற்ற அன்பு காட்டி அவர் என்னைக் கூடுவதானது மீண்டும் அவர் என்னைப் பிரிந்து செல்லப் போகிற குறிப்பை உணர்த்துவது போல் இருக்கிறதே.

நீண்டப் பிரிவுக்குப் பிறகு என்னைக் கண்டதும்,
உன்னை விட்டுப் பிரியப் போகிற கவலை…
உன் ஆடைகளுக்கு!


தண்ணந் துறைவன் தணந்தமை நம்மினும்
முன்னம் உணர்ந்த வளை.

குளிர்ந்த நீர்த் துறைக்கு உரிய காதலன் உடலால் கூடியிருக்கும் போது, உள்ளத்தால் பிரியும் நினைவு கொண்டதை என் வளையல்கள் எனக்கு முன்னரே உணர்ந்து கழன்றன போலும்!

“என்னைப் பிரிந்திருந்த போது எப்படி உணர்ந்தாய்?” என்றவளிடம்
“சொர்க்கத்தில் இருந்ததைப் போல” என்றதும் அழுகிறாள்.
உயிர் போனால்தான் சொர்க்கத்துக்குப் போக முடியும் என்பது
இவளுக்குத் தெரியாதோ?


நெருநற்றுச் சென்றாரெங் காதலர் யாமும்
எழுநாளேம் மேனி பசந்து.

நேற்றுத்தான் எம் காதலர் பிரிந்து சென்றார்; எனினும், பல நாட்கள் கழிந்தன என்பது போல் பசலை நிறம் எம்மைப் பற்றிக் கொண்டதே.

நீ சிகப்பாம்.
நான் கருப்பாம்.
கேலி பேசுகிறார்கள்.
உன்னையேத் தொடரும்
உன் நிழல் பின் எப்படியிருக்கும்?


தொடிநோக்கி மென்தோளும் நோக்கி அடிநோக்கி
அஃதாண் டவள்செய் தது.

பிரிவு காரணமாகக் கழலக் கூடிய வளையலையும், மெலிந்து போகக் கூடிய மென்மையான தோளையும் நோக்கியவன் காதலனைத் தொடர்ந்து செல்வதென்ற முடிவைத் தன் அடிகளை நோக்கும் குறிப்பால் உணர்த்தினான்.
“பிரிந்து விடு! பிரிந்து விடு!”
என்று ஆயிரம் வார்த்தைகளில் சொல்லிவிட்டு
ஒற்றைப் பார்வையில் உயிர் போகக் கெஞ்சுகிறாளே
இவளை விட்டு எப்படிப் பிரிய?


பெண்ணினாற் பெண்மை உடைத்தென்ப கண்ணினால்
காமநோய் சொல்லி இரவு.

காதல் வேட்கையைக் கண்களால் உணர்த்திக் காதலனுடன் போவதற்கு இரந்து நிற்கும்போது பெண்மைக்குப் பெண்மை சேர்த்தாற் போன்று இருக்கின்றது.

புணர்ச்சி விதும்பல் - காதல் பூக்கும் மாதம் - 200

20. புணர்ச்சி விதும்பல்

“உன்னை எனக்குப் பெயர் வைக்க சொன்னால்
என்ன பெயர் வைப்பாய்?” என்று கேட்பவளிடம்,
‘மதுமதி’ என்றேன்.
போதை தரும் நிலவுக்கு
வேறென்ன பெயர் வைக்க முடியும்?


உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்கில் காமத்திற் குண்டு.

மெதுவாய் அருந்தினால்தான் இன்பம், ஆனால் காதல் அப்படியல்ல; நினைத்தாலே இன்பம்; காதலர்கள் ஒருவரையொருவர் கண்டாலே இன்பம்.

உன் காதலின் முன்னே போட்டியிட முடியாமல்
உன்னிடம் சரணடைகின்றன
என் சின்னக் கோபங்கள்!


தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும்
காமம் நிறைய வரின்.

பனையளவாகக் காதல் பெருகிடும் போது தினையளவு ஊடலும் கொள்ளாமல் இருக்க வேண்டும்.

“உன்னோடுப் பேச மாட்டேன்” என்று சொல்லி விட்டு
கண்களால் இத்தனைக் காவியம் வடிப்பதற்கு பதில்
நீ வாயைத் திறந்தே பேசி விடலாம்!


பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக்
காணா தமையல கண்.

என்னை அரவணைக்காமல் தமக்கு விருப்பமானவற்றையே செய்து கொண்டிருந்தாலும், என் கண்கள் அவரைக் காணாமல் அமைதி அடைவதில்லை.

நீ என்னோடு கா(ய்) விட்டுப்
பேசாமல் இருக்கும் பொழுதுகளில்
மேலும் கனிந்து விடுகிறது
என் காதல்.


ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து
கூடற்கண் சென்றதென் னெஞ்சு.

ஊடுவதற்காகச் சென்றாலும்கூட அதை நெஞ்சம் மறந்து விட்டுக் கூடுவதற்கு இணங்கி விடுவதே காதலின் சிறப்பு.

என்னைப் பிரிந்து விட்டதற்காக நீயும்
உன்னைப் பிரிய விட்டதற்காக நானும்
வருத்தப் பட்டுக் கொண்டிருக்கையில்…
அமைதியாக நம்மை சேர்த்து வைக்கிறது
நம் காதல்!

எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கண்
பழிகாணேன் கண்ட இடத்து.

கண்ணில் மை தீட்டிக் கொள்ளும் பொழுது அந்த மை தீட்டும். கோலைக் காணாதது போலவே, காதலனைக் காணும்பொழுது அவன் என்னைப் பிரிந்து சென்ற குற்றத்தை மறந்து விடுகிறேன்.

நீ விலகியதில்
என் காதலுக்கு உன் மேல் வருத்தம்!
மீண்டும் நீ வந்ததும்
அத்தனை வருத்தங்களும் அரைநொடியில் மாறிப் போயின…
அழகானக் காதலாய்!

காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால்
காணேன் தவறல் லவை.

அவரைக் காணும்பொழுது அவர் குற்றங்களை நான் காண்பதில்லை; அவரைக் காணாதபொழுது அவர் குற்றங்களைத் தவிர வேறொன்றையும் நான் காண்பதில்லை.

உன்னோடு
நான் போடும் சண்டையெல்லாம்
உன்னிடம் தோற்பதற்கே!


உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல்
பொய்த்தல் அறிந்தென் புலந்து.

வெள்ளம் அடித்துக் கொண்டு போய் விடுமெனத் தெரிந்திருந்தும் நீரில் குதிப்பவரைப் போல, வெற்றி கிடைக்காது எனப் புரிந்திருந்தும், ஊடல் கொள்வதால் பயன் என்ன?

பிரிவிற்குப் பின்னான நம் முதல் சந்திப்பில்
எந்தக் காரணமும் சொல்லாமல்
என் மார்பில் முகம் புதைத்து
நீ வடித்தக் கண்ணீரில்
மேலும் சுத்தமாகிறது என் காதல்!


இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக்
கள்ளற்றே கள்வநின் மார்பு.

என்னுள்ளம் கவர்ந்த கள்வனே! இழிவு தரக்கூடிய துன்பத்தை நீ எனக்கு அளித்தாலும் கூட, கள்ளை உண்டு களித்தவர்க்கு மேலும் மேலும் அந்தக் கள்ளின் மீது விருப்பம் ஏற்படுவது போலவே என்னையும் மயங்கச் செய்கிறது உன் மார்பு.

இப்படியெல்லாம் இறுக்கிப் பிடிக்காதே
என் காதல் மிக மிக மென்மையானது
உன்னைப் போல!

மலரினும் மெல்லிது காமம் சிலரதன்
செவ்வி தலைப்படு வார்.

காதல் இன்பம், மலரைவிட மென்மையானது. அதனை அதே மென்மையுடன் நுகருபவர்கள் சிலரே ஆவார்கள்.

பார்வையில் கோபத்தீ மூட்டுகிறாள்.
மன்னிப்பு கேட்க நெருங்கினால்..
கட்டியணைத்துக் காதல் தீ மூட்டுகிறாள்!


கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல்
என்னினும் தான்விதுப் புற்று.

விழிகளால் ஊடலை வெளியிட்டவள், கூடித் தழுவுவதில் என்னைக் காட்டிலும் விரைந்து செயல்பட்டு என்னோடு கலந்து விட்டாள்