வானமெங்கும் கானம் பாடி
என் வண்ணச் சிறகை விரித்து
வான் வெளியே வலம் வரும்
ஒரு வசந்த கால
பறவையல்ல நான்!
பிறக்கும் போதே
பாசம்…
நேசம்… என்னும்
வேர்களும் விழுதுகளும்
அறுக்கப்பட்டு…
பாவச் சிலுவைகளை
நெஞ்சில் சுமந்தபடி
பாரிலே பிறந்த பறவை நான்!
ஓ…!
இந்த வேசம்
நிறைந்த உலகிலே
பாசம் என்னும்
நேசம் தேடி…
இதயத்தில்
பாரம் சுமந்தபடி
பறக்கும்
பாலைவனப் பறவை நான்!
ம்…!
உன் வீட்டு
வாசலைக் கூட
நான் அடிக்கடி
கடந்து செல்கின்றேன்!
அங்கே…
கலைந்திருக்கும்
கோலங்கள் கண்டு
கண்ணீர் சிந்தியும்
சென்றிருக்கின்றேன்!
இழப்புகள் என்பது
உனக்கும் எனக்கும்
வெவ்வேறாக இருக்கலாம்!
ஆனால்
வேதனை சுமந்து
வெந்து துடித்து
ஏக்கத்தில் தவித்து…
இங்கே…
நாளும் ஒரே படகில்
பயணம் செய்பவரென்பது
முற்றிலும் உண்மைதான்!
ம்…!
இனி
இரு வேறாக
தனித்தனி படகில்தான்
போக வேண்டும் என்றாலும் போவோம்!
எப்படியோ …
எப்போதோ …
ஒரு நிமிடம் முடிந்தால்
எங்கேனும் ஒரு கரையில்
நினைப்போம்…!
நிற்போம்…!
நிதானிப்போம்…!