சனி, 12 பிப்ரவரி, 2011

அழகு தேவதை ..!!!!



அழகின் பதுமையே !
உறவின் புதுமையே !

உனை
சிலையென செதுக்கியவன் - உன்
அழகைக்கண்டு - கற்களாய்
சிதறிபோனான்!

உனை
ஓவியமென தீட்டியவன் -உன்
வண்ணம் கண்டு -மாயமாய்
கரைந்துபோனான் !

உனை வர்ணிக்க வார்த்தைகள்
தேடினேன் - இலக்கணத்தில் !
அதில் வார்த்தைகள் இல்லையென்றாலும்!
தலைக்கணத்தோடு கூறுகிறேன்
இவ்வுலகில் நீ மட்டுமே அழகு
என்று !

உனை பார்த்த கணமே
கண்ணுள் நுழைந்தாய் !
இதயத்தில் கலந்தாய் !

உனை கண்ட சந்தோஷத்தில்
என் குருதி அங்குமிங்குமாய்
பீறிட்டு ஓடியது !

என்னுள்ளே சுருதி மெல்லிணமாய்
இசையிட்டு பாடியது !

கோலி விழி கொண்டு - எனை
கோலமிட்டு செல்கிறாய் !

பார்வையாலே பேசிக்கொண்டு
பேச்சு போட்டியில்
எனை, பேசாமலே வெல்கிறாய் !

விழி கொண்டு - எனக்கு
வழி தருவாய் !

புன்னகைத்து - எனக்கு
விடை தருவாய் !

அன்று அவையிலே
தேவியின் கூந்தல்
செயற்கை மணமென்றான்
நக்கீரன் !

உனை கண்டிருந்தால்
தேவியின் கூந்தல்
இயற்கை மணமென்றிருப்பான்!
அவையிலே அவன் வென்றிருப்பான் !

அன்று சொன்னதும் - உண்மைதான் !
இன்று சொல்வதும் - உண்மைதான் !

உன்
இதழோரம் - சிவப்பு !
இடையோரம் -மறைப்பு !
இருந்தாலும் -என் மனம்
உனை அள்ளதுடிக்கிறது
வாழ்வில் வெல்லதுடிக்கிறது

சனி, 5 பிப்ரவரி, 2011

சுகமாய்


காதல் சுகமானது
உன் பெயர் சொல்லி
அழைக்கும் போது....
கண்கள் மூடி
தவிக்கும் போது தான்
தெரிகிறது
காதல் தவறில்லை என்று....

வேர்கள் இல்லாத
தாவரங்களா?...
காம வேர்கள் இல்லாத
நட்பும் இல்லை
காதலும் இல்லை...
வேர்கள் வெளியில்
தெரிந்தால்
இறந்து போகும்
என்றே
புதைந்து கிடக்கின்றன
நம்முள்.....

வேர்களை
ஒளித்து
மறைத்து
காதல் செய்கிறேன்
சுகமாய்
என்னுள்..

ஆண் ,பெண் நட்பு...



.

ஆண் ,பெண்
நேசம் புனிதமானது...

பெண்கள்...
யார்
நம் மேல்
உண்மையான அன்பு
செலுத்துகிறார்கள் என்று
புரிந்து கொள்வதில் தான்
தவறு செய்கிறார்கள்...

ஒரு ஆண்
தன்னை நெருங்கி வந்தாலே
பெண்கள்
சந்தேகக் கண்ணோடு
பார்க்கிறார்கள்...
ஒதுங்கி கொள்கிறார்கள்...

ஆண்கள்
பெண்களிடம் பேச
விரும்புவது
மோகத்தால் மட்டும் அல்ல...
அது ரகசிய உறவுக்கான
அழைப்பும் அல்ல...
உண்மையில்
ஆண்களிடம்
பெண்மை கொட்டி கிடக்கிறது...
அன்பு,பாசம் நேசம் வேண்டி....

பெரும்பாலான ஆண்கள்
பெண்களிடம்
நல்ல நட்பு
பாராட்டவே விரும்புகிறார்கள்...

உண்மையில்
பிரச்னைக்குரிய
பெண்களின் பிடியில் இருந்து
ஆண்கள்
விலகவே
விரும்புகிறார்கள்...

ஞாயிறு, 21 நவம்பர், 2010

நட்போடு காதலித்து...

நட்பைதான் நான்
காதலிக்கிறேன்
என்கிறாய்
காதலிடம்
நட்பாய்
இருக்கிறேன் நான்
என் காதல் நீ


எல்லாரும் எனக்கு
ஒன்றுதான் என்கிறாய்
எனக்கும் காதலி
நீ ஒன்று மட்டும்தான்


நட்பு எல்லாவற்றையும்
கொடுக்கும்
காதலைத்தவிர...
காதல் எல்லாவற்றையும்
கொடுக்கும்
நட்பையும் சேர்த்து
தெரியுமா??


காதலித்தால்
நம் நட்பு சாகும் என்கிறாய்
சாகும் வரை நட்போடு
இருக்கத்தான் உன்னைக்
காதலிக்கிறேன்
உணர்ந்து கொள்ளடி..




உன்னை ஈர்க்க
ஏதுமே
செய்யவில்லையே நான்
பின் எப்படி?
எனக்கேட்கிறாய்
அதுதான் என்னை
ஈர்த்தது தெரியுமா?







நட்பு காதலாகாது
என்கிறாய்
நட்பில்லாத காதல்
காதலாகாது
என்கிறேன்
நான்






நட்பு காதலாகாது
என்கிறாய்
நட்பில்லாத காதல்
காதலாகாது
என்கிறேன்
நான்








எனக்கு நீ எப்பொழுதுமே
நண்பனாக வேண்டும்
என்கிறாய்
எனக்கு நீ எப்பொழுதுமே
நட்பான மனைவியாக
வேண்டும் என்றுதான்
சொல்கிறேன்
நான்..








நான் பிடிவாதக்காரி
என்கிறாய்
எனக்குப்பிடித்த..
என்னைப் பிடித்த..
வாதக்காரி நீ...








அனைவரிடமும்
நட்புகொள்ள
முடியும்
ஆனால்
உன்னிடம் மட்டும் தான்
காதல்
கொள்ளமுடியும்
தெரிந்துகொள்ளடி...

திங்கள், 15 நவம்பர், 2010

என் நாட்குறிப்பில





என்றோ நீ
என் கைக்கெட்டாத தூரத்தில்
கார்மேகத்துள் புதைந்து விட்டாய்!

கருகிய நெஞ்சத்தில்
விரக்தி மணம்
வீசும் போதெல்லாம்
உன் முகமே
என் மன வானில் மலர…

என் நெஞ்சமெங்கும்
உன் நினைவுகளின் விம்பங்கள்!

என் நாட் குறிப்பெங்கும்
உன் வார்த்தைப் புலம்பல்களே!

படகுகள்


வானமெங்கும் கானம் பாடி
என் வண்ணச் சிறகை விரித்து
வான் வெளியே வலம் வரும்
ஒரு வசந்த கால
பறவையல்ல நான்!

பிறக்கும் போதே
பாசம்…
நேசம்… என்னும்
வேர்களும் விழுதுகளும்
அறுக்கப்பட்டு…

பாவச் சிலுவைகளை
நெஞ்சில் சுமந்தபடி
பாரிலே பிறந்த பறவை நான்!

ஓ…!
இந்த வேசம்
நிறைந்த உலகிலே
பாசம் என்னும்
நேசம் தேடி…

இதயத்தில்
பாரம் சுமந்தபடி
பறக்கும்
பாலைவனப் பறவை நான்!

ம்…!
உன் வீட்டு
வாசலைக் கூட
நான் அடிக்கடி
கடந்து செல்கின்றேன்!

அங்கே…
கலைந்திருக்கும்
கோலங்கள் கண்டு
கண்ணீர் சிந்தியும்
சென்றிருக்கின்றேன்!
இழப்புகள் என்பது
உனக்கும் எனக்கும்
வெவ்வேறாக இருக்கலாம்!

ஆனால்
வேதனை சுமந்து
வெந்து துடித்து
ஏக்கத்தில் தவித்து…

இங்கே…
நாளும் ஒரே படகில்
பயணம் செய்பவரென்பது
முற்றிலும் உண்மைதான்!

ம்…!
இனி
இரு வேறாக
தனித்தனி படகில்தான்
போக வேண்டும் என்றாலும் போவோம்!

எப்படியோ …
எப்போதோ …
ஒரு நிமிடம் முடிந்தால்
எங்கேனும் ஒரு கரையில்

நினைப்போம்…!
நிற்போம்…!
நிதானிப்போம்…!

புதன், 10 நவம்பர், 2010

அது ஒரு அழகிய

என் நெஞ்சில்
உன் முகம்
அழகிய சிற்பமாய்!

ஓ…!
எந்த உளி கொண்டு
இத்தனை அழகாய்
செதுக்கி விட்டு…

எனை நிர்க்கதியாய்
தவிக்கவிட்டுச் சென்றாய்…?

ம்…!
என் உணர்வுகளை
எங்கோ தொலைத்து விட்டு
உன் நினைவுகள் இன்றி
வாழவேண்டும் என்றுதான்
தினமும் முயற்சிக்கிறேன்.

ஆனாலும்
ஒவ்வொரு பொழுதும்
அது தோல்வியிலேயே
முடிந்து போகிறது!

நீ என்னை விட்டு
விலகியிருக்கும் துக்கம்
தினமும் எனை தூக்கிலிட…

எப்போதும்
என் யோசனைகள்
உன்னைச் சுற்றியே
வட்டமிட வட்டமிட…

துரத்தும் உன் நினைவுகள்
என் விழிகளின்
தூக்கத்தை தொலைத்து விட…

உருண்டு…
பிரண்டு…
உறக்கத்தை தேடுகின்றேன்!

அப்போது…
தொலைபேசியின் சிணுங்கல்!

“ஹலோ”… என்றேன்!

“அன்பே!… நலமா”… என்றாய்!

ஓ!… அது நீதான்!

“ம்ம்… நலம்”… என்றேன்!

உன் கனிவான பேச்சுக்கள்
என் காதுகளை நிறைக்கிறது!

இறுதியில்…
“என் உயிர் உன் வசம்”… என்றாய்!

உன் வார்த்தையின்
எதிர்பாராத திருப்பத்தை
என்னால்
நம்பவே முடியவில்லை!

இதை
நீயா சொன்னாய்…?

சொற்கள் தடக்கி விழ
தட்டுத் தடுமாறி…
விக்கித்து…

இடறி விழுந்து…
கண் விழித்து…
எழுந்து பார்க்கின்றேன்!

ஓ…!
அது ஒரு அழகிய
அதிகாலைக் கனவு!

பூவே! … பூவே!


தென்றலுக்குள்
நான் இருப்பேன்
அதனின்
இதமான குளிராக!


நிலவுக்குள்
நான் இருப்பேன்
அதனின்
மிதமான ஒளியாக!


பூவே! … பூவே!
உனக்குள் நான் இருப்பேன்
என்றும் வீசும் மணமாக!

அதிசயக் காதல்

அடிக்கடி
உன் முகத்தின் முகவரியை
அசைபோட்டுப் பார்க்கிறேன்!
பார்ப்போர்
எல்லோர் மீதும்
பாசம் வருவதில்லை!

கண்ணில்
காண்போர் எல்லோர் மீதும்
காதல் வருவதில்லை!

ஆனால் எப்படி
உன்மீது மட்டும்
இப்படி ஒரு காதல்!

என் இதயக் கோயிலில்
காதல் வேதங்கள் ஓதப்பட…

தென்றல் தெம்மாங்கு பாடி
ஊருக்கு அஞ்சல் செய்கிறது!

உன் வாசனைகள்
எனைக் கடந்து செல்கிறது!

ம்…!
இதயத்தின்
ஒவ்வொரு அறைகளிலும்
உன் முகம் பதிகிறது!

தாலாட்டும் பூங்காற்றாய்
தழுவிச் செல்லும்
உன் நினைவால்…

என் அனுமதிகள் எதுவுமின்றி
கற்பனை நான்கு திசைகளிலும்
எட்டிப் பார்க்க…

மௌனமாய் கருத்தரித்து
விரல் வழி பிறந்து
வழியும் கவிதைகளை
விடிய விடிய
எழுதி முடிக்கிறேன்!

நெஞ்சினில் அன்பையும்
கண்களில் காதலையும்
உள்ளே தேக்கி வைத்து
தளிர் விட்ட காதலை
உன்னிடம் சொல்லி விட…

கற்பனையாய்
ஆயிரம் கவிதைகள்!
கண்ணாடி முன்
ஆயிரம் ஒத்திகைகள்!

இருந்தும் என்ன பயன்…?

உன்னைக் கண்டவுடன்
உயிரெழுத்து எது
மெய்யெழுத்து எது
எதுவுமே தெரியவில்லை!

எத்தனை மொழிகள்
எனக்குத் தெரிந்திருந்தும்
அத்தனை மொழியையும்
மொத்தமாய் மறந்து
ஒரு மொழியும் தெரியாத
பிஞ்சுக் குழந்தையாய் என் காதல்!

ம்ம்…!
இது அதிசயக் காதல்தான்!