புதன், 10 நவம்பர், 2010

அது ஒரு அழகிய

என் நெஞ்சில்
உன் முகம்
அழகிய சிற்பமாய்!

ஓ…!
எந்த உளி கொண்டு
இத்தனை அழகாய்
செதுக்கி விட்டு…

எனை நிர்க்கதியாய்
தவிக்கவிட்டுச் சென்றாய்…?

ம்…!
என் உணர்வுகளை
எங்கோ தொலைத்து விட்டு
உன் நினைவுகள் இன்றி
வாழவேண்டும் என்றுதான்
தினமும் முயற்சிக்கிறேன்.

ஆனாலும்
ஒவ்வொரு பொழுதும்
அது தோல்வியிலேயே
முடிந்து போகிறது!

நீ என்னை விட்டு
விலகியிருக்கும் துக்கம்
தினமும் எனை தூக்கிலிட…

எப்போதும்
என் யோசனைகள்
உன்னைச் சுற்றியே
வட்டமிட வட்டமிட…

துரத்தும் உன் நினைவுகள்
என் விழிகளின்
தூக்கத்தை தொலைத்து விட…

உருண்டு…
பிரண்டு…
உறக்கத்தை தேடுகின்றேன்!

அப்போது…
தொலைபேசியின் சிணுங்கல்!

“ஹலோ”… என்றேன்!

“அன்பே!… நலமா”… என்றாய்!

ஓ!… அது நீதான்!

“ம்ம்… நலம்”… என்றேன்!

உன் கனிவான பேச்சுக்கள்
என் காதுகளை நிறைக்கிறது!

இறுதியில்…
“என் உயிர் உன் வசம்”… என்றாய்!

உன் வார்த்தையின்
எதிர்பாராத திருப்பத்தை
என்னால்
நம்பவே முடியவில்லை!

இதை
நீயா சொன்னாய்…?

சொற்கள் தடக்கி விழ
தட்டுத் தடுமாறி…
விக்கித்து…

இடறி விழுந்து…
கண் விழித்து…
எழுந்து பார்க்கின்றேன்!

ஓ…!
அது ஒரு அழகிய
அதிகாலைக் கனவு!

கருத்துகள் இல்லை: