ஞாயிறு, 5 செப்டம்பர், 2010

அவர்வயின் விதும்பல் - காதல் பூக்கும் மாதம் - 180

18. அவர்வயின் விதும்பல்

உன்னையே எதிர்பார்த்து
என் கண்ணெறிந்த கனலால்
வீதியில் தீ.

வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற
நாளொற்றித் தேய்ந்த விரல்.

வருவார் வருவார் என வழி பார்த்துப் பார்த்து விழிகளும் ஒளியிழந்தன; பிரிந்து சென்றுள்ள நாட்களைச் சுவரில் குறியிட்டு அவற்றைத் தொட்டுத் தொட்டு எண்ணிப் பார்த்து விரல்களும் தேய்ந்தன.

என் மனதுக்குத் தெரியாமல்
உன்னை நானும் மெதுவாய் விலக்க…
விலகிப் போகிறது என் உயிர்.
வேகமாய் இறுக்கிப் பிடித்துக் கொள்கிறேன்…
உன்னையும், என்னுயிரையும்!


இலங்கிழாய் இன்று மறப்பினென் தோள்மேல்
கலங்கழியும் காரிகை நீத்து.

காதலரைப் பிரிந்திருக்கும் நான், பிரிவுத் துன்பம் வாராதிருக்க அவரை மறந்திருக்க முனைந்தால், என் தோள்கள் அழகு நீங்கி மெலிந்து போய் வளையல்களும் கழன்று விழுவது உறுதியடி என் தோழி.

நீ வரும் வரை
நுழையக்கூடாதென உத்தரவிட்டிருக்கிறேன்.
என் வீட்டு வாசலில்
மன்றாடிக் கொண்டிருக்கும்
மரணத்திடம்
!


உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார்
வரல்நசைஇ இன்னும் உளேன்.

ஊக்கத்தையே உறுதுணையாகக் கொண்டு வெற்றியை விரும்பிச் சென்றுள்ள காதலன், திரும்பி வருவான் என்பதற்காகவே நான் உயிரோடு இருக்கிறேன்.

உள்ளேயிருந்தால் உன் வருகையைப்
பார்க்க முடியாமல் போய்விடுமாம்.
மேலே வந்து
கண்வழியே எட்டி எட்டி பார்க்கிறது
என் இதயம்.



கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக்
கோடுகொ டேறுமென் நெஞ்சு.

காதல் வயப்பட்டுக் கூடியிருந்து பிரிந்து சென்றவர் எப்போது வருவார் என்று என் நெஞ்சம், மரத்தின் உச்சிக் கொம்பில் ஏறிப் பார்க்கின்றது.

கருப்பு வெள்ளையாய்
இருக்கும் என் கண்களும்
உனைக் கண்டால்
வண்ணங்களாய்ப் பூக்கும்!


காண்கமன் கொண்கனைக் கண்ணாரக் கண்டபின்
நீங்குமென் மென்தோள் பசப்பு.

கண்ணார என் கணவனைக் காண்பேனாக; கண்டபிறகே என் மெல்லிய தோளில் படர்ந்துள்ள பசலை நிறம் நீங்கும்.

நீண்ட பிரிவுக்குப் பிறகு சந்தித்ததும்,
கட்டிப் பிடித்து முத்த மழை பொழிகிறாள்.
“எங்கிட்ட பேசவே மாட்டேன்னு சொன்ன?” என்று கேட்டால்
“பேச மாட்டேன்னு தான சொன்னேன்” என்று
சுவரில் எழுதிக் காட்டுகிறாளே… இவளை என்ன செய்ய?
என் பங்குக்கு நானும் கொஞ்(சு)சம் முத்தமிடுவதைத் தவிர…


வருகமன் கொண்கண் ஒருநாட் பருகுவன்
பைதல்நோய் எல்லாம் கெட.

என்னை வாடவிட்டுப் பிரிந்துள்ள காதலன், ஒருநாள் வந்துதான் ஆகவேண்டும். வந்தால் என் துன்பம் முழுவதும் தீர்ந்திட அவனிடம் இன்பம் துய்ப்பேன்.

பிரிந்தவர் கூடும்பொழுது
வார்த்தை கை விடுமாம்…
சரி விடு!
முத்தம் கை கொடுக்கும்!



புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல்
கண்ணன்ன கேளிர் வரின்.

கண்ணின் மணியாம் என் காதலர் வந்தவுடன், பிரிந்திருந்த துயரின் காரணமாக அவருடன் ஊடல், கொள்வேனோ? அல்லது கட்டித் தழுவிக் கொள்வேனோ? அல்லது ஊடுதல் கூடுதல் ஆகிய இரண்டையும் இணைத்துச் செய்வேனோ? ஒன்றுமே புரியவில்லையே எனக்கு; அந்த இன்பத்தை நினைக்கும்போது.

வெற்றி பெற்று
உன்னிடம் வாழ்த்துப் பெறுவது இன்பம்தான்!
ஆனாலும் தோற்கும்போதெல்லாம்
ஆதரவாய் நீ தலை கோதுகிறாயே…
அந்த சுகத்துக்கே
எல்லாவற்றிலும் தோற்றுப் போகலாம்!


வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து
மாலை அயர்கம் விருந்து.

தலைவன், தான் மேற்கொண்டுள்ள செயலில் வெற்றி பெறுவானாக; அவன் வெண்றால் என் மனைவியுடன் எனக்கு மாலைப்பொழுதில் இன்ப விருந்துதான்.

நாம் சேர்ந்திருந்த பொழுதுகளில்
நொடிமுள் வேகத்தில் மணிமுள்ளும்
பிரிந்திருக்கும் பொழுதுகளில்
மணிமுள் வேகத்தில் நொடிமுள்ளும் சுற்றுகின்றன.
இந்த கடிகாரத்தைப் பழுது பார்க்க வேண்டும்!


ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார்
வருநாள்வைத் தேங்கு பவர்க்கு.

நெடுந்தொலைவு சென்ற காதலர் திரும்பி வரும் நாளை எதிர்பார்த்து ஏங்குபவர்க்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு யுகமாகத் தோன்றும்.

தூக்கத்திலும்
தூக்கிக் கொஞ்சுகிறேன்
நீ தரும் துயரங்களை!



பெறினென்னாம் பெற்றக்கால் என்னாம் உறினென்னாம்
உள்ளம் உடைந்துக்கக் கால்.

துன்பத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல் மனம் நிலையிழந்து போயிவிடுமானால், பிறகு ஒருவரையொருவர் திரும்பச் சந்திப்பதனாலோ, சந்தித்துக் கூடவதினாலோ, என்ன பயன்?

கருத்துகள் இல்லை: