புதன், 8 செப்டம்பர், 2010

கனவுநிலை உரைத்தல் - காதல் பூக்கும் மாதம் - 130

13. கனவுநிலை உரைத்தல்

கனவிலும் முத்தங்களைக்
கொடுத்து என்னைக்
கடனாளியாக்குகிறாய்!



காதலர் தூதொடு வந்த கனவினுக்
கியாதுசெய் வேன்கொல் விருந்து.

வந்த கனவு காதலர் அனுப்பிய தூதுடன் வந்ததே; அந்தக் கனவுக்குக் கைம்மாறாக என்ன விருந்து படைத்துப் பாராட்டுவது?


நேரில் தான் உன்னோடு பேசமுடிவதில்லை.
கனவில் உன்னைக் கண்டாலாவது
உயிரோடிருப்பதைச் சொல்லலாம் என்றால்
உறங்காமல் அடம்பிடிக்கிறதே
இந்தக் கண்கள்!

கயலுண்கண் யானிரப்பத் துஞ்சின் கலந்தார்க்
குயலுண்மை சாற்றுவேன் மன்.

நான் வேண்டுவதற்கு இணங்கி என் மை எழுதிய கயல் விழிகள் உறங்கிடுமானால், அப்போது என் கனவில் வரும் காதலர்க்கு நான் இன்னமும் உயிரோடு இருப்பதைச் சொல்லுவேன்.


கனவில் மட்டும்தான்
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்…
உன்னையங்கு காண்பதால்!



நனவினான் நல்கா தவரைக் கனவினால்
காண்டலின் உண்டென் உயிர்.

நனவில் வந்து அன்பு காட்டாதவரைக் கனவிலாவது காண்பதால்தான் இன்னும் என்னுயிர் நிலைத்திருக்கிறது.


இனிமையானக் கனவெல்லாம்
நனவாகி விட்டு…
கொடுமையான நனவெல்லாம்
அதில் வரும்
கனவாகி விட்டாலென்ன?


கனவினான் உண்டாகும் காமம் நனவினான்
நல்காரை நாடித் தரற்கு.

நேரில் என்னிடம் வந்து அன்பு காட்டாத காதலரைத் தேடிக் கொண்டு வந்து காட்டுகிற கனவால் எனக்குக் காதல் இன்பம் கிடைக்கிறது.


வருகிற வரை புரிவதில்லை
காதலென்று!
கலைகிற வரை தெரிவதில்லை
அதுவும் கனவென்று!



நனவினாற் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான்
கண்ட பொழுதே இனிது.

காதலரை நேரில் கண்ட இன்பம் அப்போது இனிமை வழங்கியது போலவே, இப்போது அவரைக் கனவில் காணும் இன்பமும் இனிமை வழங்குகிறது!


மெல்ல உன் விரல் பிடித்து
செல்லமாய் சில சொடுக்கெடுத்து
மெதுவாய்க் கூந்தல் கோதி
நெற்றியில் முத்தமிட நெருங்குகையில்
கலைகிறது…கனவு!



நனவென ஒன்றில்லை ஆயின் கனவினாற்
காதலர் நீங்கலர் மன்.

நனவு மட்டும் திடிரென வந்து கெடுக்காமல் இருந்தால், கனவில் சந்தித்த காதலர் பிரியாமலே இருக்க முடியுமே.


நனவில் வராமல் கொல்கிறாய்.
கனவில் வந்து கொல்கிறாய்.

நானவினான் நல்காக் கொடியார் கனவினான்
என்னெம்மைப் பீழிப் பது.

நேரில் வந்து அன்பு காட்டாத கொடிய நெஞ்சமுடையவர், கனவில் வந்து பிரிவுத் துயரைப் பெரிதாக்குவது என்ன காரணத்தால்?


நான் தூங்கும்போது
கனவில் நெருங்கி வந்து
தோள் சாய்ந்தவள்
விழித்துப் பார்த்தால் காணவில்லை…
வழியெங்கும் தேடினால்…
நிம்மதியாய் உறங்கிக் கொண்டிருக்கிறாய்
என் இதயமெத்தையில்!



துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால்
நெஞ்சத்தார் ஆவர் விரைந்து.

தூக்கத்தில் கனவில் வந்து என் தோள் மீது சாய்ந்து இன்பம் தந்தவர், விழித்தபோது எங்கும் போய் விடவில்லை; என் நெஞ்சில் தாவி அமர்ந்து கொண்டார்.


கனவு மட்டும் இல்லையென்றால்
உன்னைக் காண்பது
கனவாகவேப் போயிருக்கும்!



நனவினான் நல்காரை நோவர் கனவினான்
காதலர்க் காணா தவர்.

கனவில் காதலரைக் காணாதவர்கள்தான் அவர் நேரில் வந்து காணவில்லையே என்று நொந்து கொள்வர்.


நாம் பிரிந்துவிட்டோமென்று
சொல்கிறவர்க்கெல்லாம்
கனவு காணும் பழக்கமில்லையோ?


நனவினான் நம்நீத்தார் என்பர் கனவினான்
காணார்கொல் இவ்வூ ரவர்.

என் காதலர் என்னைப் பிரிந்திருப்பதாக அவரைக் குற்றம் சாட்டுகிறார்களே, இந்த ஊரார், பிரிந்து சென்ற தமது காதலனைக் கனவில் காண்பது கிடையாதோ?