திங்கள், 30 ஆகஸ்ட், 2010

புணர்ச்சி விதும்பல் - காதல் பூக்கும் மாதம் - 200

20. புணர்ச்சி விதும்பல்

“உன்னை எனக்குப் பெயர் வைக்க சொன்னால்
என்ன பெயர் வைப்பாய்?” என்று கேட்பவளிடம்,
‘மதுமதி’ என்றேன்.
போதை தரும் நிலவுக்கு
வேறென்ன பெயர் வைக்க முடியும்?


உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்கில் காமத்திற் குண்டு.

மெதுவாய் அருந்தினால்தான் இன்பம், ஆனால் காதல் அப்படியல்ல; நினைத்தாலே இன்பம்; காதலர்கள் ஒருவரையொருவர் கண்டாலே இன்பம்.

உன் காதலின் முன்னே போட்டியிட முடியாமல்
உன்னிடம் சரணடைகின்றன
என் சின்னக் கோபங்கள்!


தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும்
காமம் நிறைய வரின்.

பனையளவாகக் காதல் பெருகிடும் போது தினையளவு ஊடலும் கொள்ளாமல் இருக்க வேண்டும்.

“உன்னோடுப் பேச மாட்டேன்” என்று சொல்லி விட்டு
கண்களால் இத்தனைக் காவியம் வடிப்பதற்கு பதில்
நீ வாயைத் திறந்தே பேசி விடலாம்!


பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக்
காணா தமையல கண்.

என்னை அரவணைக்காமல் தமக்கு விருப்பமானவற்றையே செய்து கொண்டிருந்தாலும், என் கண்கள் அவரைக் காணாமல் அமைதி அடைவதில்லை.

நீ என்னோடு கா(ய்) விட்டுப்
பேசாமல் இருக்கும் பொழுதுகளில்
மேலும் கனிந்து விடுகிறது
என் காதல்.


ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து
கூடற்கண் சென்றதென் னெஞ்சு.

ஊடுவதற்காகச் சென்றாலும்கூட அதை நெஞ்சம் மறந்து விட்டுக் கூடுவதற்கு இணங்கி விடுவதே காதலின் சிறப்பு.

என்னைப் பிரிந்து விட்டதற்காக நீயும்
உன்னைப் பிரிய விட்டதற்காக நானும்
வருத்தப் பட்டுக் கொண்டிருக்கையில்…
அமைதியாக நம்மை சேர்த்து வைக்கிறது
நம் காதல்!

எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கண்
பழிகாணேன் கண்ட இடத்து.

கண்ணில் மை தீட்டிக் கொள்ளும் பொழுது அந்த மை தீட்டும். கோலைக் காணாதது போலவே, காதலனைக் காணும்பொழுது அவன் என்னைப் பிரிந்து சென்ற குற்றத்தை மறந்து விடுகிறேன்.

நீ விலகியதில்
என் காதலுக்கு உன் மேல் வருத்தம்!
மீண்டும் நீ வந்ததும்
அத்தனை வருத்தங்களும் அரைநொடியில் மாறிப் போயின…
அழகானக் காதலாய்!

காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால்
காணேன் தவறல் லவை.

அவரைக் காணும்பொழுது அவர் குற்றங்களை நான் காண்பதில்லை; அவரைக் காணாதபொழுது அவர் குற்றங்களைத் தவிர வேறொன்றையும் நான் காண்பதில்லை.

உன்னோடு
நான் போடும் சண்டையெல்லாம்
உன்னிடம் தோற்பதற்கே!


உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல்
பொய்த்தல் அறிந்தென் புலந்து.

வெள்ளம் அடித்துக் கொண்டு போய் விடுமெனத் தெரிந்திருந்தும் நீரில் குதிப்பவரைப் போல, வெற்றி கிடைக்காது எனப் புரிந்திருந்தும், ஊடல் கொள்வதால் பயன் என்ன?

பிரிவிற்குப் பின்னான நம் முதல் சந்திப்பில்
எந்தக் காரணமும் சொல்லாமல்
என் மார்பில் முகம் புதைத்து
நீ வடித்தக் கண்ணீரில்
மேலும் சுத்தமாகிறது என் காதல்!


இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக்
கள்ளற்றே கள்வநின் மார்பு.

என்னுள்ளம் கவர்ந்த கள்வனே! இழிவு தரக்கூடிய துன்பத்தை நீ எனக்கு அளித்தாலும் கூட, கள்ளை உண்டு களித்தவர்க்கு மேலும் மேலும் அந்தக் கள்ளின் மீது விருப்பம் ஏற்படுவது போலவே என்னையும் மயங்கச் செய்கிறது உன் மார்பு.

இப்படியெல்லாம் இறுக்கிப் பிடிக்காதே
என் காதல் மிக மிக மென்மையானது
உன்னைப் போல!

மலரினும் மெல்லிது காமம் சிலரதன்
செவ்வி தலைப்படு வார்.

காதல் இன்பம், மலரைவிட மென்மையானது. அதனை அதே மென்மையுடன் நுகருபவர்கள் சிலரே ஆவார்கள்.

பார்வையில் கோபத்தீ மூட்டுகிறாள்.
மன்னிப்பு கேட்க நெருங்கினால்..
கட்டியணைத்துக் காதல் தீ மூட்டுகிறாள்!


கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல்
என்னினும் தான்விதுப் புற்று.

விழிகளால் ஊடலை வெளியிட்டவள், கூடித் தழுவுவதில் என்னைக் காட்டிலும் விரைந்து செயல்பட்டு என்னோடு கலந்து விட்டாள்

கருத்துகள் இல்லை: